அனைத்து வகை சரக்கு வாகனங்கள் சாலையில் செல்லலாம்;போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு

அனைத்து வகை சரக்கு வாகனங்களையும் சாலைகளில் செல்ல அனுமதிக்க வேண்டும், என்று அனைத்து மாவட்ட போலீசாருக்கும் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பால், குடிநீர், காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சாலைகளில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நாளிதழ்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களையும் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டுவிட்டு, இதுபோன்ற வாகனங்களை சாலைகளில் செல்ல அனுமதிப்பதில்லை. இதனால் அன்றாடம் இந்த வாகனங்களில் செல்வோர் போலீசாரிடம் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் இதுபற்றி வயர்லெஸ் மூலம் தகவல் சொல்லியும் கூட, கீழ்மட்ட போலீசார் அதை மதிப்பதில்லை.

இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகல் அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இனிமேல் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் அல்லாமல், அனைத்துவகை சரக்கு வாகனங்களும் தடை இல்லாமல் சாலைகளில் செல்ல போலீசார் அனுமதிக்க வேண்டும் என்றும், சரக்குகளை இறக்கிவிட்டு காலியாக வரும் வாகனங்களையும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற வாகனங்களை ஓட்டிவரும் டிரைவர்களிடம் அடையாள அட்டை கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது என்று போலீசாருக்கு, டி.ஜி.பி. தெளிவுபடுத்தி உள்ளார்.

வாகனங்களில் ஆட்கள் செல்வதைத்தான் தடுக்கவேண்டும் என்பது விதி. ஆனால் போலீசார் சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி, சாலைகளில் தேவை இல்லாமல் வாகன நெரிசலை ஏற்படுத்துகிறார்கள். எனவே, டி.ஜி.பி. திரிபாதியின் உத்தரவு கீழ்மட்ட போலீசார் வரை அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பழைய நிலையே தொடரும் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top