கொரோனா தடுப்பு; தமிழக அரசின் சிறப்புக் குழுவில் Dr.சிவராமன் உட்பட 3 நிபுணர்கள் இணைக்கப்பட்டனர்

 

 கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் ஓய்வுபெற்ற பல்துறை மருத்துவ நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கண்காணிப்புக்குழுத் தலைவர் தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து வெளியில் வருபவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் உள்ளோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர் சென்று வந்த பகுதிகளில் உள்ளோர், அவரது வீடு அமைந்துள்ள 7 கி.மீ. சுற்றளவு பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றைத் தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் முதல் தொற்று மார்ச் 8-ம் தேதி ஓமனிலிருந்து திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாளில் கிடுகிடுவென உயர்ந்து தற்போது தமிழகத்தில் 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நடவடிக்கையாக முதல்வர் 11 சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளார். இந்தக் குழுவின் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் இருப்பார்.

தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை பல்வேறு துறைகள் மூலம் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றிக் கிடைக்கவும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன.

முதல் குழு மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புப் பணிகளையும், பிற மாநிலங்களுடன் ஒருங்கிணைப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், கரோனா வைரஸ் தொடர்பான 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் இவர்களது கண்காணிப்பில் இருக்கும்.

இரண்டாவது குழு அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி தொடர்பாகவும், பிற மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்திற்குள்ளேயும் அத்தியாவசியப் பொருட்கள் நகர்வினை உறுதி செய்ய வேண்டும்.

மூன்றாவது குழு அத்தியாவசியப் பொருட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

நான்காவது குழு ஊடக ஒருங்கிணைப்புப் பணிகளையும், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பற்றி துண்டுப் பிரசுரங்கள், ஒலிப்பெருக்கி போன்றவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐந்தாவது குழு கொரோனா வைரஸ் பரவுவதைக் கண்காணிப்பதோடு, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான உபகரணங்களுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் அமைப்பதை உறுதி செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆறாவது குழு அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்ல ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏழாவது குழு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவதோடு, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களையும் தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும் கிடைக்க ஏற்பாடு செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எட்டாவது குழு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.

ஒன்பதாவது குழு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரது நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், வயது முதிர்ந்தோர், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

இதில் ஐந்தாவது குழு கே.கோபால், பி.சந்திரமோகன், சு.நாகராஜன் ஆகியோர் கொரோனா வைரஸ் பரவுவதைக் கண்காணிப்பதோடு, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான உபகரணங்களுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் அமைப்பதை உறுதி செய்யும் பணிகளையும் மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் முக்கியத்துவம் கருதி ஓய்வுபெற்ற நிபுணர்களை இக்குழுவில் இணைத்து டாஸ்க் ஃபோர்ஸின் தலைவர் தலைமைச் செயலர் சண்முகம் அரசாணை பிறப்பித்துள்ளார்.

புதிதாக இணைக்கப்பட்டவர்கள் விவரம் :

1. டாக்டர் எஸ்.பி. தியாகராஜன், நுண்ணுயிரியலாளர் (மைக்ரோ பயாலஜிஸ்ட்) முன்னாள் துணைவேந்தர் மற்றும் டீன் ராமச்சந்திரா உயர்கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறை.

2. சித்த மருத்துவர் கு.சிவராமன் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய உறுப்பினர்.

3. டாக்டர் குகாநந்தம் ( தொற்று நோயியல் நிபுணர்) முன்னாள் சுகாதாரத்துறை அலுவலர் சென்னை மாநகராட்சி.

மேற்கண்ட மூவரும் ஐந்தாவது குழுவுடன் இணைந்து பணியை மேற்கொள்வார்கள்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top