கொரோனா அரசியலானது!அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை!

செய்திக்கட்டுரை

திடீரென தமிழ்நாட்டின்  தலைமைச்செயலாளர் சண்முகம் அவர்கள் இன்று அனைத்து மதத் தலைவர்களுடன் பிற்பகல் 3 மணிக்கு கொரோனா குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தொற்று உலக அளவில் பெரும் பாதிப்பை நிகழ்த்தி வருகிறது.இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலகத்தலைவர்கள் நினைக்கவில்லை.

அமெரிக்கா போன்ற விஞ்ஞானம் வளர்ந்த நாடுகளில் கூட கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதை எதிர்கொள்ள அரசியல்  தலைவர்களுக்கு முன்கணிப்பு இல்லாததால் மக்கள் மத்தியில் கொரோனாவை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தார்கள். அதில் மிக முக்கியமாக அமெரிக்கா கொரோனா வைரஸ்ஸை ‘சீன வைரஸ்’ என்று சொல்லி ஒரு இனத்தையே அவமானப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இந்தியா ஆரம்பத்தில் எந்தவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் உலகச் சுகாதார நிறுவனம் கேள்வி கேட்ட பிறகே கொரோனாவை பற்றிய புரிதலை மக்கள் மத்தியில் திடீரென உருவாக்கியது. உடனே, முன்னேற்பாடுகள் ஏதுமின்றி ஊரடங்கு அறிவித்தது.ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளானார்கள்.கொத்துக்கொத்தாய் இறந்து போனார்கள்,சொந்த ஊருக்கு நடந்தே போனார்கள்,போகும்போது சிலபேர் மரணித்தார்கள்.

மக்கள் அரசை நோக்கி கேள்வி கேட்டார்கள். பத்திரிகைகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்ததால் பாதி செய்திகள்தான் வெளியே வந்தது. பிறகு, அரசியல் இயக்கங்கள் சமூகவலைத்தளம் மூலம் எல்லாச் செய்திகளையும் மக்களிடம் கொண்டு சென்றார்கள்.அதன் பிறகுதான் எதிர்கட்சியே [காங்கிரஸ் கட்சி] அரசை நோக்கி கேள்வி கேட்டது.அரசுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அப்போது அவர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கைகொடுத்தார்.ஆமாம், சீன வைரஸ் என்று சொல்லி மக்களின் கோபத்தை ஆற்றுப்படுத்திய அமெரிக்காவின் உத்தியை பாஜக கட்சி பயன்படுத்த ஆரம்பித்தது.

டெல்லியில் தப்லீக் ஜமாஅத் நடத்திய இஸ்லாமியர்கள் மாநாட்டிற்கு வருகை தந்த வெளி நாட்டு இஸ்லாமியர்கள்தான் இந்த கொரோனா தொற்றை பரப்பினார்கள் என்றும் அந்த மாநாட்டில் பங்கெடுத்த அனைவரும் பரிசோதனை செய்யவேண்டும் என்று பரப்புரை செய்தார்கள்.

ஆளும் பாஜக கட்சி நினைத்தது போலவே நடந்தது. இந்த செய்திக்கு பிறகு யாரும் புலம் பெயர்ந்து சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்களைப் பற்றி பேசவில்லை.ஆனால், இந்த உத்தி தமிழ்நாட்டில் வேறுமாதிரி எதிர்வினையை பாஜக அரசுக்கு-எடப்பாடி அரசுக்கு ஏற்படுத்தியது.

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் ஈஷா யோகா மைய்யத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் மகா சிவராத்திரி நடத்தினார். அதில், 150 வெளிநாட்டு நபர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களை பரிசோதிக்கவேண்டும் என்று கேள்வி எழுந்தது. சுகாதாரத்துறை செயலாளர் முதல் முதல்வர் எடப்பாடியார் வரை இது குறித்து பதில் சொல்ல ஆரம்பித்ததும் ,நிலைமை கைமீறி போகிறது என்று தெரிந்ததும் , ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் “தமிழ் மக்களை கெஞ்சி கேட்கிறேன் குறிப்பிட்ட மதத்தினரால் கொரோனா பரவுகிறது என்று கூறாதீர்கள்” என்று கை எடுத்து கும்பிட்டு வேண்டுகோள் வைத்திருந்தார் .

ஆனாலும் தமிழக மக்கள் தொடர்ந்து இந்த கேள்வியை எழுப்புவதால் ஈஷா யோகா மையத்தில் மார்ச் 28 ஆம் தேதி மருத்துவ பரிசோதனை நடைபெற்றதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், வெளிநாட்டினருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் ஸ்கிரின் டெஸ்ட் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை விவரங்கள் கிடைக்கவில்லை.அவைகள் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கின்றன என்று செய்திகள் வருகின்றன.[கொரோனா தொற்று இருப்பதாக] அவைகள் வெளிவந்தால் தமிழகத்தில் இன்னும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.  

இந்நிலையில், அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா  குறித்து  மத ரீதியாக கருத்துக்கள் வெளியாவதை தவிர்க்க வேண்டுமென இந்த ஆலோசனையின் போது வலியுறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் முதல்வரிடம் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யுங்கள் எல்லோரும் இணைந்து கொரோனாவை விரட்டுவோம் என்றார்.அதற்கு முதல்வர் ஒரு பொறுப்பற்ற  பதிலை அளித்தார் “இது மருத்துவம் சார்ந்த பிரச்சனை.இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்த தேவை இல்லை” என்றார். இப்போது இந்த பிரச்சனை மருத்துவம் தாண்டி அரசியலாக நிற்கிறது.இப்போதாவது எடப்பாடிக்கு புரியும்மா? இது அரசியல்தான் என்று!  

சேவற்கொடியோன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top