பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்; முழுமையான பொருளாதார முடக்கம் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும்!

முழுமையான அளவில் பொருளாதாரத்தை முடக்குவது இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உடனடி, அவசர நடவடிக்கை எடுக்க இந்த உலகம் தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இப்போது 3 வார ஊரடங்கின் மத்தியில் உள்ளது. அரசு அதற்கு பிறகும் இதனை மேலும் நீட்டிக்கும் என நான் சந்தேகப்படுகிறேன். நமது மக்களின் சிக்கலான, யதார்த்தமான பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு அரசு ஒரு நுணுக்கமான அணுகுமுறையை மேற்கொள்வது முக்கியம்.

நாடு அதிகமான மனிதாபிமானமற்ற செயல்களை சந்தித்து வருகிறது. இந்தியாவின் நிலைமை தனித்துவமானது என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். மற்ற பெரிய நாடுகள் கடைபிடித்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து நாம் வேறுவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தினக்கூலியை நம்பியிருக்கும் ஏழை மக்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள். எனவே அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் மூடுவது நமக்கு ஒருதலைப்பட்சமான செயலாக ஆகிவிடும்.

முழுமையான பொருளாதார முடக்கம் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை அதிகரித்துவிடும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களையும், முதியவர்களையும் தனிமைப்படுத்தவும், பாதுகாக்கவும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். முதியவர்களுக்கு அருகில் இருப்பதால் ஏற்படும் ஆபத்துகளை இளைஞர்களுக்கு தெளிவாகவும், கடுமையாகவும் தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவில் பல லட்சக்கணக்கான முதியவர்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள்.

முழுமையான முடக்கத்தால் பொருளாதாரம் பாதிப்பதோடு, வேலை இழந்த பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்புகிறார்கள். அங்கு வசிக்கும் தங்கள் பெற்றோர் மற்றும் முதியவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறார்கள். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும்.

நாம் உடனடியாக சமூக பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். ஏழை தொழிலாளர்களுக்கு அடைக்கலமும், ஆதரவும் அளிக்க நமது ஆதாரத்தை பயன்படுத்த வேண்டும்.அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகள் மற்றும் வென்டிலேட்டர்களுடன் கூடிய பெரிய ஆஸ்பத்திரிகள் வேண்டும். இந்த கட்டமைப்பை உருவாக்குவதும், தேவையான கருவிகளை உற்பத்தி செய்வதும் முக்கியம்.

அதேசமயம் கொரோனா வைரஸ் பரவுவது பற்றியும் அதனை கட்டுப்படுத்துவது பற்றியும் துல்லியமான தகவலை அறிய சோதனைகளின் எண்ணிக்கையையும் நாம் அதிகரிக்க வேண்டும்.

நமது பொருளாதாரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், வர்த்தகம், விவசாயம் ஆகியவையே முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் நலன்களை பாதுகாப்பது மிக முக்கியம்.

இந்த மிகப்பெரிய சவாலை எதிர்த்து போராடுவதிலும், முறியடிப்பதிலும் நாங்கள் அரசுடன் இணைந்து பாடுபடுவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top