அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கமும், உயிர்ப்பலியும் உச்சத்துக்கு செல்லும் – டிரம்ப் பரபரப்பு பேட்டி

ஒரு புள்ளி விவரத்தின் படி அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிர்ப் பலியும் 2 வாரத்தில் உச்சத்துக்கு செல்லும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதியான டிரம்ப் கூறினார்.

வல்லரசு நாடான அமெரிக்காவிலும் இப்போது கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி, அங்கு இந்த வைரஸ் பிடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்து விட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 2,475.

நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்த வைரஸ் 18 ஆயிரம் பேருக்கு தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 255 அமெரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா வைரசுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி நியூயார்க் நகரத்தில் மட்டும், 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 960 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

நியூஜெர்சி மாகாணத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. அங்கு இதுவரை 13 ஆயிரம் பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 161 பேர் பலியாகியும் உள்ளனர்.

மேலும் 20 மாகாணங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

24 மாகாணங்களில் ஊரடங்கு, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்னதாக தேசிய நெருக்கடி நிலையையும் ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே அறிவித்து அதுவும் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்கள் மத்தியில் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளை மாளிகையின் பொது சுகாதார ஆலோசகர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு உறுப்பினர்களான டாக்டர் டெபோரா பிரிக்ஸ், டாக்டர் அந்தோணி பாசி ஆகியோர் ஆலோசனைப்படி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வருவதற்கான கால வரையறை ஏப்ரல் 30-ந்தேதி நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தணிப்பதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள், புதிதாக கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்கும், பலி எண்ணிக்கையையும் குறைக்கும் என்று டாக்டர் டெபோரா பிரிக்ஸ், டாக்டர் அந்தோணி பாசி எடுத்துக்காட்டி உள்ளனர்.

தங்களது தன்னலமற்ற எழுச்சியூட்டும், துணிச்சலான முயற்சிகள் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும் என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள்தான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள்.

புதிய சமூக வழிகாட்டுதல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் 1-ந் தேதி அறிவிக்கப்படும். ஜூன் 1-ந் தேதி வாக்கில் நாம் மீண்டு வருவதற்கான பாதையில் நன்றாக இருப்போம் என்று நம்புகிறேன்.

கொரோனா வைரசால் நாம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் உயிர்ப்பலி 22 லட்சம் அளவுக்கு போகக்கூடும் என எனக்கு சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலியை 1 லட்சம் என்ற அளவுக்கு கட்டுப்படுத்தி விட்டாலே நாம் நன்றாக செயல்பட்டிருக்கிறோம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே டிரம்ப், கொரோனா வைரஸ் பற்றி கருத்து தெரிவிக்கையில் ஈஸ்டர் பண்டிகைக்குள் (ஏப்ரல் 12-ந்தேதி) இயல்பு நிலைக்கு அமெரிக்கா திரும்பி விடும் என எதிர்பார்ப்பதாக கூறி இருந்தார்.

இப்போது அவரே ஜூன் 1-ந் தேதி வாக்கில் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் இருப்போம் என கூறி இருப்பது, அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

இதற்கு இடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசாங்க உத்தரவை கடைப்பிடிக்காமல் பொதுவெளியில் சுற்றித்திரிகிறவர்கள் மீது மாகாண அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்கத்தொடங்கி உள்ளன.

சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் நியூயார்க்கிலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கு 200 டாலர் முதல் 400 டாலர்வரை (சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையில்) அபராதம் விதிக்கத்தொடங்கி இருக்கிறார்கள்.

நியூயார்க் நகரத்தில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் உடல்களை பாதுகாப்பாக வைக்க போதுமான அளவுக்கு பிணவறை வசதி இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது அந்த நகர ஆஸ்பத்திரிகளில் உடல்களை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட லாரிகளை நிறுத்தி இருப்பதை பார்ப்பதாக டிரம்ப் கூறி உள்ளார்.

ஏற்கனவே தாக்கியுள்ள மற்ற வைரஸ்களின் புள்ளி விவரத்தின்படி பார்த்தால், இப்போதைக்கு கொரோனா வைரஸ் பரவலை தணிக்காவிட்டால், அதனால் 16 லட்சம் முதல் 22 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் டெபோரா பிரிக்ஸ் எச்சரித்துள்ளார்.

டாக்டர் பிரிக்ஸ் கணிப்பு அடிப்படையில் பார்த்தால், 2 வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் உச்சம் தொடும், பலியும் அதேபோல அதிகரிக்கும் என்று டாக்டர் அந்தோணி பாசி கூறி உள்ளார்.

இப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கான கால வரம்பை ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து, டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உயிர்ப்பலி 80 ஆயிரம் முதல் 1 லட்சத்து 60 ஆயிரம் வரையில் இருக்கும் என்று டாக்டர் டெபோரா பிர்க்ஸ் கணித்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top