ஊரடங்கு காரணமாக டெல்லியிலிருந்து ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் 200 கி. மீட்டர் நடந்து சென்ற நிலையில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து பலியானார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் அனைத்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வியாபார மையங்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் டெல்லி பகுதிகளில் வேலை பார்க்கும் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இதையடுத்து அவர்களில் பெரும்பாலானோர் டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலை வழியாக சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கிறார்கள்.

மத்திய பிரதேச மாநிலம் மோரேனா மாவட்டம் பாத்காபுரா கிராமத்தை சேர்ந்த ரன்வீர்சிங் (38) என்பவர் தெற்கு டெல்லியில் உள்ள டுப்லாகாபாத் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக ரன்வீர் வேலை பார்த்த ஓட்டலும் மூடப்பட்டது. இதனால் அவர் வருமானம் இன்றி தவித்தார். இதையடுத்து அவர் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். வாகன போக்குவரத்து எதுவும் இல்லாததையடுத்து அவர் தனது 2 நண்பர்களுடன் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது கிராமத்துக்கு நடந்து சென்றார்.

3 பேரும் சுமார் 200 கிலோ மீட்டர் நடந்து சென்றனர். அப்போது திடீரென்று ரன்வீர்சிங் மயங்கி ரோட்டிலேயே விழுந்தார்.

உடனே இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ரன்வீருக்கு டீ கொடுத்து உதவினார்கள். ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரன்வீர்சிங் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையில் ரன்வீர்சிங் நெஞ்சுவலியால் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top