திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்

கொரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் கை கொடுப்போம் என்று தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளின்படி, தி.மு.க. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு உதவிடும் வகையில் சுகாதார பாதுகாப்புக்கான பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 26-ந்தேதி சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை தலைமை டாக்டர் தணிகாசலத்திடம் 1,000 முகக்கவசங்கள், 250 கிருமிநாசினி திரவ பாட்டில்கள் வழங்கப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதுகுறித்த காணொளியை பதிவிட்டிருந்தார்.

இதனை மேற்கோள் காட்டி, தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முகக்கவசம், கிருமிநாசினி திரவம் (சானிடைசர்), சோப்பு ஆகியவற்றைத் திரட்டி வழங்கும் சேவையை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் செய்யவேண்டும். கொரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top