திணறுகிறது அமெரிக்கா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு

வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனாவின் கோரமான பிடியிலிருந்து வெளியேற முடியாமல் திணறி வருகிறது. அந்த நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேரைக் கடந்தது, அங்கு நேற்று ஒரே நாளில் 398 பேர் உயிரிழந்தனர், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்புக்குள்ளாகினர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறித்து கண்காணித்து வரும் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழம் வெளியிட்ட அறிக்கையில், “ அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 798 பேராக அதிகரித்துள்ளது, 99 ஆயிரத்து 583 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் 398 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 2,522 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது நியூயார்க் நகரம்தான். பெரும்பாலான உயிரிழப்புகள், பாதிப்புகள் நியூயார்க் நகரில் நேர்ந்துள்ளன. ஒரே நாளில் நேற்று மட்டும் 18 ஆயிரம் 363 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் அடிப்படையில் சீனாவைக் காட்டிலும் 20 ஆயிரம் பேர் அதிகமாக இத்தாலியிலும், 2-வது இடத்தில் அமெரிக்காவில் 15 ஆயிரம் பேர் அதிகமாகவும் இருக்கின்றனர். இத்தாலியின் இறப்பு விகிதம் 10.5 சதவீதம் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் 1.5 சதவீதம் மட்டும்தான்.

அமெரிக்காவில் அதிகமான மக்கள் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாகி வருவதால், உயிரிழப்பு விகிதம் குறைந்து வருகிறது. நியூயார்க் நகரம் போன்ற மற்ற நகரங்களில் கொரோனா பரவும் போதும் பலியும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நியூயார்க் நகரில் இப்போதே மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறையும், செயற்கை சுவாசமும் பற்றாக்குறையாக இருப்பதால் அதை தீர்க்க வேண்டியது அவசியமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் சுகாதாரக் கொள்கை துறையின் பேராசிரியர் தாமஸ் சாய் கூறுகையில் “ கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதைப் பார்த்து வருகிறோம், அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவதையும், செயற்கை சுவாசம் பெறுவதையும் பார்த்து வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக இறப்பு விகிதமும் இதேபோல வரப்போகிறது என்று நினைக்கிறோம்” என கவலைத் தெரிவித்தார்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top