கொரோனா தாக்கிய பத்திரிக்கையாளர், சுய தனிமையை மீறி கமல்நாத் ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டார்!

மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த கமல்நாத் ராஜினாமா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுய தனிமைக்கு உள்ளாக்கப்பட்ட பத்திரிகையாளர் விதிமுறையை மீறிப் பங்கேற்றதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் போபால் நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் மகள் லண்டனில் சட்டம் பயின்று வருகிறார். அவர் கடந்த 18-ம் தேதி போபால்  நகருக்கு வந்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வீட்டில் சுய தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தினர். அடுத்த இரு நாட்களில் அந்தப் பத்திரிகையாளரின் மகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

மேலும், மகளுடன் வீட்டில் இருந்ததால் பத்திரிகையாளரையும் 14 நாட்கள் சுய தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறுவுறுத்தினர்.

இந்நிலையில், அந்த பத்திரிக்கையாளர் இந்த ஊடகச்சந்திப்பில் பங்கேற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். கடந்த 20-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நடந்த அரசியல் குழப்பம் காரணமாக முதல்வர் கமல்நாத் பதவியிலிருந்து விலகினார். அப்போது கமல்நாத் ஊடகத்தினரைச் சந்தித்து பேட்டி அளித்தார். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் சுய தனிமைக்கு ஆளாகிய அந்தப் பத்திரிகையாளரும் பங்கேற்றார். அந்தச் சந்திப்பு முடிந்த சில நாட்களில் சுய தனிமைக்கு ஆளாக்கப்பட்ட அந்தப் பத்திரிகையாளருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுய தனிமையை மீறிச் சென்று, மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்த அந்தப் பத்திரிகையாளர் மீது ஷியாமலா ஹில்ஸ் போலீஸார் ஐபிசி 188, 269, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை போபால் மாவட்ட போலீஸ் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

இதனால், கமல்நாத் பத்திரிகையாளர் சந்திப்பில் சுய தனிமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையாளருடன் சேர்ந்து பங்கேற்ற மற்ற பத்திரிகையாளரும் தாங்களும் சுய தனிமைக்குச் செல்ல வேண்டுமா அல்லது தங்களையும் கரோனா நோய்த் தொற்று தாக்குமா எனும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 33 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் இந்தூரைச் சேர்ந்தவர்கள் 16 பேர், போபாலைச் சேர்ந்தவர்கள் 3 பேர், ஷிவ்புரியைச் சேர்ந்தவர் இருவர், குவாலியரைச் சேர்ந்தவர் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தூர், உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த இரு கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top