மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு ரூ. 50 லட்சம் காப்பீடு: மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தீவிரம் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மருத்துவர்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள் தங்களது உயிர்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை அளிக்கும்போது அவர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும் வகையில் இன்று ஒரு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.

ஒருவேளை துரதிருஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top