எல்லைகள் மூடப்பட்டதால் காட்டுவழியாக சென்ற கூலி தொழிலாளர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்!

எல்லைகள் மூடப்பட்டதால் காட்டுவழியாக சென்ற கூலி தொழிலாளர்கள் 4 பேர் தேனி மாவட்டம் போடி அருகே ஏற்பட்ட காட்டுத் தீயில்  சிக்கி உயிர்இழந்தனர் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக எல்லைகள் மூடப்பட்டு உள்ள நிலையில், பக்கத்து மாநிலத்திற்கு போய் கூலிவேலை செய்பவர்கள் மிகவும் சிரமப்பட்டுகொண்டிருக்கின்றனர்.அவர்கள் தினசரி கூலிகள் ஆதலால், வேலைக்கு போனால்தான் சாப்பாட்டிற்கு வழி பிறக்கும்.அரசு ஊரடங்கை அறிவித்ததே தவிர ஏழை எளிய மக்களுக்கு அன்றாட தேவைக்கு இன்னும் பணத்தையோ,நிவாரணத்தையோ வழங்கவில்லை.

நமக்கு அருகில் இருக்கும் மாநிலமான கேரளாவில் உள்ள ஏலக்காய், தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக தமிழகத்தின் கம்பம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் தினக் கூலியாக ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதற்காக 300-க்கும் மேற்பட்ட கேரள ஜீப்கள் தொழிலாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சியாக தமிழக எல்லை மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இதனால், கேரள எல்லையில் குடும்பத்துடன் தங்கியிருந்த பலரும் வனப்பகுதி வழியாக சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர்.

போடி அருகே ராசிங்காபுரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, இவருடைய மனைவி ஜெயஸ்ரீ, இவர்களது மகள் கிருத்திகா மற்றும் உறவினர்கள் சிலர் சாந்தாம்பாறை அருகே பேத்தொட்டி பகுதி தோட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டனர்.

போக்குவரத்து இல்லாததால் போடிமெட்டுப் பகுதியில் இருந்து உச்சலூத்து மலைப்பாதை வழியே நடந்து பிற்பகலில் கீழிறங்கத் தொடங்கினர். தடை செய்யப்பட்ட வனப்பகுதியான இதன் வழியே வஞ்சிரமணி (25) விஜயமணி (45), மகேஸ்வரி (25), ஒண்டிவீரன் (28) மஞ்சுளா (28), லோகேஸ்வரன் (20),கல்பனா (45) ஆகியோரும் சேர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

அரளியூத்து என்ற இடத்தைநெருங்கியபோது அப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது. 5 அடி உயரத்துக்குக் காய்ந்த புற்கள் அதிகம் இருந்ததால் உச்சியை நோக்கி வேகமாக தீ பரவியது. புகை அதிகளவில் சூழ்ந்ததால் அவர்கள் அனைவரும் பாதையை விட்டு விலகினர்.கரடுமுரடான பகுதியில் வழிதெரியாமல் ஓடினர்.

இதனால், காட்டுத்தீயில் சிக்கிபலரும் பரிதவித்தனர். உடன் மலையடிவாரத்தில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு மொபைல்போன் மூலம்தகவல் தெரிவித்தனர். அதன்பிறகே காட்டுத்தீயில் தொழிலாளர்கள் சிக்கிய விவரம் வனத்துறைக்குத் தெரியவந்தது.

செங்குத்தான பாறைகள் நிறைந்த பாதை என்பதால் மீட்புக்குழு செல்வதில் சிரமம் இருந்தது. மேலும் இருள் சூழ்ந்ததால் மலையேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. கொண்டு சென்ற குடிநீரும் தீர்ந்ததால் தாகத்தில் தவித்தனர். இதையடுத்து மலையடிவாரத்தில் இருந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்து மற்றொரு குழுவினர் குடிநீர் கொண்டு வந்து கொடுத்தனர். மேலும் டார்ச், மொபைல் டார்ச் போன்ற எளிய உபகரணம் மூலம் அங்கிருந்தவர்களை இக்குழு காப்பாற்றியது

வனத்துறையினர் அங்கு சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி விஜயமணி (45), இவரது பேத்தி கிருத்திகா (2) ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயமடைந்த அனைவரையும் குழுவினர் மீட்டு டோலி,ஸ்ட்ரெச்சர் மூலம் மலையடிவாரத்துக்குக் கொண்டு வந்தனர்.

இதில் மகேஸ்வரி (25) போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தேனிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா (36) நேற்று காலை உயிரிழந்தார். இதனால் இறந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மற்ற 6 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top