கொரோனா வைரஸ் தாக்கிய ஒரு நோயாளி கூட இல்லாத மாநிலம் ஜார்கண்ட் மாநிலம்!

கொரோனா வைரஸ் என்ற வார்த்தை கேட்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆடிப்போயுள்ள நிலையில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட இல்லாத மாநிலம் இருக்கிறதென்றால் அது ஜார்கண்ட் மாநிலம்தான்  

உலகமே இப்போது அஞ்சும் ஒரு வார்த்தை ‘கொரோனா வைரஸ்’. உலகில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. 4.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,941 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் மெல்லப் பரவிய கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை இங்கும் நிலைநாட்ட முயல்கிறது. இதுவரை 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 11 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது.

ஆகையால்தான் மற்ற நாடுகளில் கடைபிடிக்கப்பட்ட உத்தியை கடைபிடிக்க பிரதமர் மோடி முடிவு எடுத்தார். அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று அமலுக்கு வந்தது. அனைத்து மாநிலங்களும் தீவிரமான ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளன.

ஆனால், கரோனா வைரஸின் கோரப் பார்வை படாத ஒருமாநிலம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஜார்க்கண்ட் மாநிலம்தான். அங்கு இதுவரை கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லை என்றபோதிலும் இந்த அரக்கனை வரவிடாமல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இதுவரை கொரோனா அறிகுறிகளுடன் இருந்த 77 பேரின் ரத்த மாதரிகளைப் பரிசோதித்தோம், அதில் 61 பேருக்கு கொரோனா இல்லை. 16 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. கொரோனா இல்லாத மாநிலமாக இருக்கிறோம்.

இத்தாலி, சீனா, துபாய் நாடுகளில் இருந்து வந்த 450 பேரையும் கண்காணித்து வருகிறோம். இதுவரை எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை. கரோனா வைரஸ் நோய் இல்லாத மாநிலமாக இருப்பதற்கு முதல்வர் ஹேமந்த் சோரனும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்” என்றனர்.

21 நாட்கள் ஊரடங்கு குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் கூறுகையில், “ 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை முன்கூட்டியே அமல்படுத்தி இருக்க வேண்டும். எந்த சூழலையும் எதிர்கொள்ள ஜார்க்கண்ட் மாநிலம் தயாராக இருக்கிறது. மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இங்குள்ள மக்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்குச் செல்லாமல், மலைவாழ் மக்கள் முறைப்படி பாரம்பரிய மருத்துவத்தையே பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top