இன்று மாலைமுதல் ஊரடங்கு; கோயம்பேடு பேருந்து சேவைகள் நிறுத்தம்;மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

தமிழகத்தில் மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வர உள்ளதால் வெளியூர் செல்லும் பேருந்துகள் பிற்பகல் 2.30 மணியுடன் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து மக்கள் பீதி அடைந்து இருக்கிறார்கள்.ஒரு வாரத்திற்கு உணவுக்கு அரசு  உத்திரவாதம் கொடுக்காததால் எல்லோரும் ஊருக்கு கிளம்பத்தயாராகி விட்டனர்.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலால் 3,81,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி, பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் அதன் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் தனிமைப்படுத்துதலில் காட்டப்படும் அலட்சியம்.

தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பு தீவிரத்தை மாநில அரசு உணர்ந்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இப்போது அந்த நடவடிக்கையே மக்களை தனிமைப்படுத்தாமல் கூட்டமாக கூட வாய்ப்பளித்து விட்டது

தமிழக அரசு நேற்று வேகவேகமாக பல முடிவுகளை அறிவித்தது. அதில் ஒன்று மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடையுத்தரவு நடைமுறைக்கு வரும். இதையடுத்து நிலைமையின் தீவிரத்தை தாமதமாக உணர்ந்த சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் அடித்துப் பிடித்து வாகனங்களில் சொந்த ஊருக்குக் கிளம்பினர். இது நகரங்களிலிருக்கும் கொரோனாவை கிராமத்துக்குக் கொண்டு செல்லும் செயல் என பல அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்திருந்தனர்.

கோயம்பேட்டில் அலைமோதிய கூட்டம் இன்று காலையில் குறைந்தது. காரணம் வெளியூர் பயணம் செல்லும் பல பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. ஆனாலும் 5 மணி நேரப் பயண தூரங்களுக்கான பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பேருந்து போக்குவரத்து இன்று பிற்பகல் 2.30 மணியுடன் நிறுத்தப்பட்டது. யாரும் பேருந்துக்காக கோயம்பேடு வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையிலும் இருக்கமுடியாமல் ஊருக்கும் போகமுடியாமல் மக்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.அரசு இவர்களுக்கு என்ன பதில் சொல்லபோகிறது.ஊரடங்கு உத்தரவு போடுவதற்கு முன்பு மக்கள் ஊருக்கு செல்ல வசதிகள் செய்து கொடுத்திருக்கவேண்டும். அதை செய்யாமல் திடீரென ஊரடங்கு போட்டால் மக்கள் என்ன செய்வார்கள்.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top