நீட் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு; முதல்வர்

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை அன்று தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக அரசு மத்திய அரசு சொல்கிற வேலையை செய்யும் அரசாக பாஜக வின் கொள்கைக்கு உடன்பட்டு அதிமுக கொள்கையை விட்டுவிட்டது. அதில் ஒன்று நீட் தேர்வை ஆதரித்தது .

நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வந்தும், விடாபிடியாக தமிழக அரசு தமிழகத்திலே அதை செயல்படுத்தியது. பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் அப்போதும் இந்த அதிமுக அரசு ‘நீட்’ தேர்வை தடை செய்யவில்லை.

இந்நிலையில், திடீரென அதிமுக அரசு நீட் தேர்வு தமிழகத்தின் மாணவர்களை பாதிக்கிறது என்று பேச ஆரம்பித்து இருக்கிறது. உள்ஒதுக்கீடு மூலம் தமிழக மாணவர்களை மருத்துவ கல்லூரிகளுக்கு அதிகம் அனுப்ப முடிவு செய்திருக்கிறது. இது எல்லோரையும் வியப்படைய செய்திருக்கிறது.நீட் வேண்டாம் என்று தமிழக மக்கள் சொல்லும் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணம்? வேறொன்றும் இல்லை. ‘தேர்தலே’ 2021 ல் வரும் பொதுதேர்தலுக்கு அதிமுக அரசு தயாராகி வருகிறது. அதற்கான நாடகமே இந்த மனமாற்றம்.

நேற்று சட்டசசபையில் நீட் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரையை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து இருக்கிறார்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகம் உட்பட நாடுமுழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு முறை கடந்த 2016-17-ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து அந்த ஆண்டு விதிவிலக்கு வழங்கப்பட்டது.

தமிழக அரசும், பொதுமக்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகிறோம். கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி நீட் தேர்வை எதிர்த்து ஒரு சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதேநேரம், இந்த நீட் தேர்வுதமிழக மாணவர்களை, குறிப்பாக கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை விளக்கி, உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடப்பட்டு வருகிறது. நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பின் அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த நிலை, வரும் ஆண்டுகளில் தொடரக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. இது மட்டுமின்றி, அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், கள்ளர், சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகைசெய்யும் சிறப்புச்சட்டம் ஒன்றை இயற்ற அரசு பரிசீலித்து வருகிறது.

இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையத்தில் பள்ளிக்கல்வி, சுகாதாரம், சட்டம் ஆகியதுறைகளின் அரசு செயலர்கள்,பள்ளிக்கல்வித் துறையால் நியமிக்கப்படும் 2 கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். மருத்துவக் கல்வி இயக்குநர் இந்த ஆணையத்தின் உறுப்பினர் – செயலராகச் செயல்படுவார்.

மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்து அவர்களின் சமூக, பொருளாதார நிலையை மதிப்பீடு செய்து, இந்நிலையை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஒரு மாதத்துக்குள் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

“இதுநாள்வரை சும்மா இருந்துவிட்டு பல மாணவர்கள் தற்கொலைக்கு ‘நீட்டை’ காரணமாக்கி விட்டு,தேர்தல் வந்ததும் இந்த அரசு நீலி கண்ணீர் வடிக்கிறது”.என்று பெற்றோர்கள் பேசுகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top