தமிழகத்தில் 2,984 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 2,984 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு  தெரிவித்துள்ளது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், முகக் கவசங்கள், கிருமி நாசினி ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்தப் பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், அவை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்களை அனுப்பியது.

இதன் அடிப்படையில் பிற மாநில அரசுகள் உத்தரவுகளைப் பிறப்பித்த போதும், தமிழக அரசு  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள முகக் கவசம், கிருமி நாசினியைப் பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

சென்னையில் முகக் கவசங்கள், கிருமி நாசினி  கிடைக்காத நிலை உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்காது என்றும் மனுவில் கூறியிருந்தார்.

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துருந்தார்.

இந்த மனுவை ஏற்கெனவே நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இது சம்பந்தமாக தமிழக அரசு  மார்ச் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (மார்ச் 20) நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் சோதிக்கப்பட்ட 222 பேரில் 166 பேருக்குக் கரோனா இல்லை எனவும், 2 பேருக்கு அறிகுறி இருப்பதாகவும், 54 பேரின் மாதிரிகள் சோதனையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 19.30 லட்சம் முகக் கவசங்கள் இருப்பில் உள்ளதாகவும், பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா சந்தேகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 044-29510500/400, 9444340496, 8754448477, 104 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எஃப்.எம். விளம்பரங்கள் மூலமும் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒலிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 780 பயணிகளில் 2,984 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர், சானிடைசருக்கான மூலப்பொருள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அதை நிறுத்தி வைத்துள்ளோம் எனத் தெரிவித்தார். முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்ய எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 23 ஆம் தேதித்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால், தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதுதொடர்பாகவும் அரசுத் தரப்பு விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top