குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை கோரிய வழக்குக்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மூத்த வக்கீல் வைகை உள்ளிட்டோர் ஆஜராகி அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள உரிமைகளால் இதுபோன்ற போராட்டங்களை சட்டரீதியாக தடுக்க முடியாது என்று வாதிட்டனர்.

ஒரு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் என்.சந்திரசேகரன், ‘பல இடங்களில் போராட்டங்கள் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த சட்டவிரோத போராட்டத்தால் பொதுமக்கள்தான் பாதிக்கிறனர்‘ என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில அரசு குற்றவியல் வக்கீல் என்.நடராஜன், ‘144 தடை உத்தரவு போட்டால் அனைவரையும் பாதிக்கும் என்பதால் போலீஸ் கமிஷனர் எந்த சட்டவிரோத போராட்டமும் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இதுபோன்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டங்களில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் பங்கேற்பதால் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முடியவில்லை’ என்றார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், ‘போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர முடியுமே தவிர, போராட்டம் நடத்தக்கூடாது. மீறி போராடினால் அது சட்டவிரோதம்’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top