தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) காலியாகின்றன. அந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வேட்புமனு 6-ந்தேதி தொடங்கியது. 13-ந்தேதி பிற்பகல் 3 மணிவரை வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

இந்தநிலையில் கடந்த 9ம் தேதி திமுக சார்பில்  தி.மு.க. வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

அதிமுக சார்பில் அதிமுக வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான தமாகா சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய 3 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கடந்த 12ம் தேதி மனு தாக்கல் செய்தனர்.  

இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், இளங்கோ யாதவ் ஆகிய 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த 9 பேரின் மனுக்கள் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அலுவலக அறையில் பரிசீலனை செய்யப்பட்டது.

இதில், திமுக சார்பில் மனு தாக்கல் செய்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒரு வேட்பாளருக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். ஆனால், பத்மராஜன் உட்பட 3 சுயேச்சை வேட்பாளர்களுக்கு யாரும் முன்மொழியாததால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

இதனால், திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் 6 பேரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று கடைசி நாள் ஆகும்.  அதன்படி, திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்டவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

போட்டியின்றி தேர்வாகியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளதால், வருகிற 26ம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிக்கான தேர்தல் நடைபெறாது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top