ம பி விவகாரம்;காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக விடுங்கள்; வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக சட்டசபைக்கு செல்ல ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.அவர்களை யாரும் சிறைப்படுத்தி வைக்க முடியாது விசாரணை நாளை ஒத்திவைப்பு என்று சுப்ரீம்கோர்ட் கூறியது .

மத்திய பிரதேசம் சட்டசபையில் உடனடியாக பலப்பரீட்சை நடத்தக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்று விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 10-ந் தேதி அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

அவரது ஆதரவாளர்களாக இருந்துவந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

சட்டசபையில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் வலியுறுத்தியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல், கொரோனா வைரஸ் பரவலை காரணம்காட்டி சட்டசபை 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், சுப்ரீம் கோர்ட்டை நாடினார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியை கருத்தில் கொண்டு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கமல்நாத் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

சவுகான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் பெங்களூருவில் தங்கியுள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் அனைவரையும் நீதிபதிகளின் அறைகளில் ஆஜர்படுத்த தயார்.

சுப்ரீம் கோர்ட் அல்லது, கர்நாடக மாநில ஐகோர்ட் பதிவாளரை பெங்களூருவில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு அனுப்பி அவர்களின் வாக்குமூலங்களை சுப்ரீம் கோர்ட் பெறலாம் என குறிப்பிட்டார்.

இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், சட்டசபை பலப்பரீட்சையின் போது அவர்கள் வாக்களிக்க செல்வதும் செல்லாததும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் முடிவுக்கு விடுகிறோம். ஆனால், அவர்கள் சுதந்திரமாக சட்டசபைக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அவர்களை யாரும் சிறைப்படுத்தி வைக்க முடியாது என கூறி இவ்வழக்கின் விசாரணையை 19-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.
கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top