தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 12-வது நாளாக வேலைநிறுத்தம்!அரசு தலையிட கோரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 12-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகு மீனவர்கள் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, காலை 5 மணிக்கு கடலுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்புகிறார்கள். இவ்வாறு சென்று வரும்போது குறைவாக மீன்கள் கிடைப்பதால் பெரும் ந‌‌ஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எனவே விசைப்படகு மீனவர்களுக்கு 48 மணி நேரம் தங்கி கடல் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும். அல்லது ஜூன் 15-ந்தேதி முதல் நவம்பர் மாத கடைசி வரை வழக்கம்போல் கடலுக்கு சென்று இரவு 12 மணி வரை மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். டிசம்பர் முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒருநாள் விட்டு ஒருநாள், ஒருபகல், ஒரு இரவு மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதால், கோர்ட்டு மூலம் இறுதி முடிவை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று 12-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விசைப்படகுகள் அனைத்தும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top