காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா விடுதலை: வீட்டு சிறைவாசம் முடிந்தது

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா விடுதலை ஆனார். அவரது 7 மாத கால வீட்டு சிறைவாசம் முடிவுக்கு வந்தது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 370 மற்றும் 35-ஏவை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அதைத்தொடர்ந்து காஷ்மீரில் விரும்பத்தகாத செயல்கள் நடந்துவிடாதபடிக்கு, அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் உடனடியாக தடுப்புக்காவலில் (வீட்டு சிறைவாசம்) வைக்கப்பட்டனர்.

பரூக் அப்துல்லா, சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார் என கூறி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ் மனு) தாக்கல் செய்தார்.

அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுக்க இருந்த நிலையில், செப்டம்பர் 15-ந் தேதி பரூக் அப்துல்லா மீது கடுமையான பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

இந்த சட்டம், ஒருவரை கைது செய்து விசாரணையின்றி 3 மாதங்கள் காவலில் வைக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. மேலும் இந்த காவலை 2 ஆண்டுகள்வரை நீட்டிக்கவும் முடியும்.

82 வயதான பரூக் அப்துல்லா மீது பாய்ந்த பொது பாதுகாப்பு சட்ட காவலை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன.

இந்தநிலையில், அவரது பொது பாதுகாப்பு சட்ட காவல் உத்தரவை ரத்து செய்து காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அதைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் மாவட்ட கலெக்டர் ஷாகித் இக்பால் சவுத்ரி, பரூக் அப்துல்லாவின் வீட்டுக்கு சென்று, அவரிடம் இந்த உத்தரவை நேரில் வழங்கினார். உடனடியாக அவர் விடுதலை ஆனார்.

இதன் மூலம் அவரது 7 மாத கால வீட்டு சிறைவாசம் முடிவுக்கு வந்தது.

விடுதலை ஆன உடன் பரூக் அப்துல்லா தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்தவாறு நிருபர்களுக்கு முதன்முதலாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். மற்ற அரசியல் தலைவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார் கள் என்று நம்புகிறேன். எனது விடுதலைக்காக போராடிய நாடாளுமன்றவாதிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற தலைவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னர்தான் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய முடியும்.

எங்களுக்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். மற்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறவரை எந்தவொரு அரசியலும் பேச மாட்டேன்.

நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

பேட்டியின்போது அவரது மனைவி மோலி அப்துல்லா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

பரூக் அப்துல்லாவின் விடுதலையை வரவேற்று அவரது தேசிய மாநாடு கட்சி வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி பாய்ந்தது. அவரது 6 மாத கால தடுப்புக்காவல் முடிவுக்கு வந்த தருணத்தில், இந்த சட்டம் பாய்ந்தது நினைவுகூரத்தக்கது.

உமர் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்ட காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட், கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதன்மீது காஷ்மீர் யூனியன் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை கடந்த 5-ந் தேதி நடைபெற இருந்தது. ஆனால் ஹோலி பண்டிகையையொட்டி, அது ஒத்தி போடப்பட்டுள்ளது.

இதேபோன்று மெகபூபா முப்தியின் காவலை எதிர்த்து அவரது மகள் இல்திஜா முப்தியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு வரும் 18-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top