மத்திய பிரதேசத்தில் பாஜக கைவரிசை; 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா-ஆட்சி கவிழ்கிறது

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேரை பாஜக விலைபேசி விட்டது.அவர்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. 

ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் வெளியேறினர். அவர்கள் பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழப்பத்திற்கு பாஜகவே காரணம் என்றும், கமல் நாத்தின் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கமல் நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணையலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிராதித்யா சிந்தியா கடிதம் அனுப்பினார். ஆனால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் இன்று ராஜினாமா செய்தனர். அவர்கள் ஆளுநருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். 19 பேர் ஒட்டுமொத்தமாக விலகியதால், காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் செய்த அதே வேலையை மத்திய பிரதேசத்திலும் பாஜக செய்ய ஆரம்பித்து விட்டது.மக்களிடையே பாஜகவிற்கு செல்வாக்கு குறைந்து விட்டதால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி எம்.எல்.ஏ க்களை பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கி மறைமுகமாக ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு உள்ளது.

228 இடங்களை கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் 19 பேர் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரசின் பலம் 121ல் இருந்து 102 ஆக குறைந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஆட்சியமைக்க 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது. பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top