யெஸ் வங்கியை மீட்க பாரத ஸ்டேட் வங்கி களமிறங்கி இருப்பது விநோதமான செயல்! – ப.சிதம்பரம்

யெஸ் வங்கியை மீட்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி களமிறங்கி இருப்பது விநோதமான செயல் என முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

யெஸ் வங்கி அதிகமான கடன்களை வழங்கியதால் வாரா கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் சிக்கித்தவித்த வங்கி நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன் வசப்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது. மேலும் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து மும்பையில் உள்ள யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அடுத்தகட்ட நடவடிக்கையாக மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ராணா கபூர் விசாரணை செய்யப்பட்டார்.

இந்த சூழலில் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளது. இதனால் வங்கி தொடர்ந்து இயங்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் யெஸ் வங்கியை மீட்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி களமிறங்கி இருப்பது விநோதமான செயல் என மத்திய முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின் கீழ் நிதி நிறுவனங்களின் தவறான நிர்வாகத்தால்தான் யெஸ் வங்கி தோல்வி அடைந்துள்ளது.

இது தொடர்பாக பாரத ரிசர்வ் வங்கி முழுமையான விசாரணை நடத்தி, காரணமானவர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும். ஆனால் ரூ.2,450 கோடிக்கு இந்த வங்கியின் 49 சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கியை வாங்க வைக்கும் திட்டம் வினோதமானது” என்று கூறினார்.

மேலும் யெஸ் வங்கிக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் படுதோல்வி என குற்றம்சாட்டிய அவர், நாட்டின் நிதி நிறுவனங்களை பா.ஜனதா அரசு தவறாக நிர்வகிப்பதன் வெளிப்பாடு இது என்றும் விமர்சித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top