குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு!

நீதிமன்றங்கள் நாட்டின் தலையாய பிரச்சனைகளை முக்கியம் கருதி அணுகவேண்டும்.இந்தியாவில் இன்று தலையாய பிரச்சனையாக இருப்பது குடியுரிமை திருத்தச்சட்டம்தான். மக்களை மதவாரியாக பிரிக்கும் இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க கோரி மக்கள் போராடிவருகிறார்கள் போராடும் மக்களை ஆளும் கட்சிக்கு சாதகமாக வன்முறை கும்பல் துப்பாக்கியால் சுட்டும் வாழ்வாதாரத்தை சிதைத்தும் இந்தியாவின் ஜனநாயக வெளியை தீ க்கு இரையாக்குகிறார்கள். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்தியாவின் நீதி நிறுவனங்கள்.மக்கள் கடைசியாக நம்பிக்கொண்டிருக்கும் இந்த நீதி நிறுவனங்களை மக்களே காக்கவேண்டிய சூழல் வருமோ என்ற அய்யம் ஏற்படுகிறது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது எனவும், சபரிமலை வழக்கை முடித்த பின்னரே விசாரிக்க முடியும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

மக்களை மதரீதியாக பிரித்து குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், இந்த சட்டத்தை ஆதரித்து வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மற்றும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்க அமைதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

மொத்தத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக 140 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மனுக்களிலும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “இந்த சட்டம், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. இந்த சட்டத்தின் பலன் இந்துகள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு கிடைக்கிற நிலையில், முஸ்லிம்களுக்கு மறுப்பது வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டும் நோக்கத்துடன் உள்ளது. இது சமத்துவத்துக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது. மதத்தின் அடிப்படையில் விலக்கு அளிப்பதன் மூலம், சட்ட விரோதமாக குடியேறியவர்களில் ஒரு பிரிவினருக்கு குடியுரிமை அளிப்பதை இந்த சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது” என்று அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜனவரி 22-ந் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அனைத்து மனுக்கள் மீதும் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, இந்த வழக்கு விசாரணை 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

[தலைமை நீதிபதி பாப்டே அவர்கள் அன்றே தற்காலிகமாக இந்த ஜனநாயகமற்ற சட்டத்திற்கு தடை விதித்திருந்தால் இந்தியாவில் போராட்டமே நடந்திருக்காது]  

ஆனால் இதுவரை மத்திய அரசு சார்பில் இந்த மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.இவ்வளவு களேபரத்திற்கு பிறகும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை! மக்கள் மீதும் நீதித்துறை மீதும் எவ்வளவு அக்கறை!

இந்தநிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி இந்த மனுக்களை விரைந்து விசாரிக்கும் வகையில் பட்டியலிட வேண்டும் என்று முறையிட்டார். மேலும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தற்போது இந்த மனுக்களை அவசர வழக்காக பட்டியலிட முடியாது என்றும், ஹோலி விடுமுறைக்கு பிறகு மீண்டும் முறையிடுமாறும் கூறினார். மேலும் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு சபரிமலை தொடர்பான வழக்கை விசாரித்து முடித்த பின்னர் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் ஹோலி விடுமுறை வருகிற 9-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி முடிவடைவது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top