விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த பேராசிரியர் அறிவரசன் அய்யா மறைவு!

திருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும், ஈழப் போராளிகளுக்குத் தமிழ்கற்றுத் தந்தவருமான பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி முதுமை காரணமாக அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார்

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற அவர், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று ஈழத்திற்குச் சென்று அங்குள்ள தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்கற்றுக் கொடுத்தார்.

முக்கியப் போராளிகள், குழந்தைகள், மக்கள் என அனைவருக்கும் தமிழ் பயிற்றுவிக்கும் வேலையை 2006ம் ஆண்டு முதல் 2008 வரையில் இப்பணியை செய்தார். ‘ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்’ என்ற இவருடைய நூல் முக்கியமானது

ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்து தமிழாசிரியர்களை உருவாக்கினார்.

அய்யா அறிவரசன் அவர்கள் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். பல நாடுகளுக்கும் சென்று தமிழ் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டவர். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய மற்றும் பெரியாரிய இயக்கங்களுடன் இணைந்து பல்வேறு அரசியல் மற்றும் பகுத்தறிவுப் பணிகளில் ஈடுபட்டவர்.தமிழிசையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.


வாழ்நாள் முழுவதும் தமிழ்க் கொடை அளித்த அவர், இறப்புக்குப் பிறகு தமது உடலையும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கியுள்ளார்.

தமிழகத்தின் பெரியாரிய உணர்வாளர்கள்,தமிழ்த்தேசிய உணர்வாளர்கள்,தமிழிசை ஆர்வலர்கள்,எனவும் தமிழக அரசியல் கட்சியை சார்ந்தவர்களும்,மக்கள் இயக்க செயல்பாட்டாளர்களும் ஒன்று திரண்டு இன்று அய்யா அறிவரசன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top