இந்தியத் தொல்லியல்துறைக்கு தாரைவார்க்கப்படும் தமிழக கோயில்கள்!

தமிழக கோவில்களை இந்தியத் தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைப்பது உயர்சாதி ஆதிக்கத்திற்கு துணைபோகும் செயலாகும்.தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானதாகும்

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 10  தேதியன்று மக்களவையில் பேசிய பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங், இந்தியத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.

தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் 3,691 நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 745 இடங்கள் இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ளன. இந்த நிலையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கிய நினைவுச் சின்னங்களை இந்தியத் தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ)-ASI கீழ் கொண்டுவரக் கருதியிருப்பதாகவும் தற்போது ஏஎஸ்ஐயின் கீழ் உள்ள சில நினைவுச் சின்னங்களை மாநிலங்களுக்கு அளித்துவிட முடிவெடுத்திருப்பதாகவும் இது தொடர்பாக மாநிலங்களின் கலாச்சாரத் துறை அமைச்சர்களுடன் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாகவும் பிரஹலாத் சிங் தெரிவித்தார்.

இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை பத்தாயிரமாக உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 7,000க்கும் மேற்பட்ட கோவில்கள் நூறாண்டுகளுக்கு மேல் பழமையானவை என்றும் பிரஹலாத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இது தொடர்பாக கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் 

“தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து – பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை எடுக்க முயன்று  தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக – அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டது. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கூட கைப்பற்ற முயன்று – அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது.  தமிழைப் புறக்கணித்து – இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் “தாலாட்டு”பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து – இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட விரும்புகிறது” என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். 

“தமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மைவாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன”என்று மத்திய அமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் சுட்டிக்காட்டியிருப்பது – தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டு – தமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம். தமிழ்நாட்டின் “பரம்பரை எதிரிகள்” தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்” எனவும் தெரிவித்திருக்கும் ஸ்டாலின்,  தமிழக மக்களின் உணர்வை மீறி மத்திய அரசு செயல்பட்டால், அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்துமென்றும் கூறியிருக்கிறார். 

ஏஎஸ்ஐயின் கட்டுப்பாட்டுக்குள் தமிழக கோவில்கள் போனால் பழமை மாறாமல் பாதுகாக்கப்படும் என்பது உண்மைதான். இப்போதும், அது பாதுகாக்கப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. ஆனால், இந்தியாவிலே கோவிலுக்கு என்று தனியாக அறநிலைத்துறை என்ற அமைப்பை உருவாக்கி அதை மக்கள் சொத்தாக அதே நேரத்தில் மரபுகளையும் பேணி காத்து வருவது தமிழகத்தின் இந்து அறநிலைத்துறை.மட்டுமே! இந்த அறநிலைத்துறை உயர்சாதி பிராமணர்களின் கோவில் ஆதிக்கத்தை கட்டுபடுத்தி வருவதால் கோவில்களை எல்லாம் தொல்லியல் கையில் ஒப்படைத்து விடுவோம் அறநிலைத் துறையை ஒழித்து கட்டிவிடலாம் என சிலர் எண்ணுகிறார்கள்.அதற்கு பாஜக அரசு துணைபோகிறது.கோவில்கள் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் நல்லது அப்போதுதான் கோவில் இந்து மக்களுக்கானதாக இருக்கும் அல்லது அது பிராமணர்களுக்கு சொந்தமாகிவிடும்! 

இந்திய தொல்லியல் துறை தமிழகம் தொடர்பான விஷயங்களில் பெரிய சுணக்கத்தை காட்டும் உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் 70 சதவீத கல்வெட்டுகளை இந்தியத் தொல்லியல் துறை படியெடுத்துவிட்டது. ஆனால், அவை இன்னும் பதிப்பிக்கப்படவில்லை. தமிழகத்தின் உண்மை வரலாறு தெரிந்து விடும் என்று அவைகளை பதிப்பிக்காமல் இருக்கிறது

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ்  38,652 திருக்கோயில்கள் உள்ளன. இதில் 7,000 திருக்கோயில்கள் நல்ல வருவாய் உள்ள  பாடல் பெற்ற கோயில்கள்.  மீதமுள்ள கோயில்கள் சிறிய கோயில்கள். இந்த சிறிய கோயில்கள், பிற கோயில்களில் இருந்து கிடைக்கும் வருவாயிலிருந்தும் அரசின் உதவியுடனும் பராமரிக்கப்பட்டுவருகின்றன. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top