அரசு அனுமதி பெறாத குடிதண்ணீர் ஆலைகளுக்கு சீல்; குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம்

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியார் கேன் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து உரிமம் இல்லாத தனியார் குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்து வருகிறார்கள்.


குடிநீருக்காக தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் அபாயகரமான அளவுக்கு குறைந்து விட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக சில அதிரடி உத்தரவுகளை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டது.

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியார் கேன் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து உரிமம் இல்லாத தனியார் குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்து வருகிறார்கள்.

இதற்கு தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடிநீர் உற்பத்தியை நிறுத்தி விட்டு அவர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று (சனிக்கிழமை) 3-வது நாளாக நீடித்தது.

கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தி இருப்பதால் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. பல இடங்களில் கேன் தண்ணீர் இல்லை என்ற நிலை தோன்றி உள்ளது.

இதை பயன்படுத்தி சிலர் கூடுதல் விலைக்கு கேன் தண்ணீரை வழங்குகிறார்கள். ஆனால் இந்த கேன் தண்ணீர் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டது தானா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீரை குடிக்கலாமா? வேண்டாமா? என்று மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உரிமம் பெறாத தனியார் குடிநீர் ஆலைகளை இன்று அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் 1,689 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 470 குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 215 குடிநீர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் இருந்து தினமும் 5 லட்சம் குடிநீர் கேன் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

4 மாவட்டங்களில் உள்ள தனியார் குடிநீர் ஆலைகளில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பதால் கேன் தண்ணீர் சப்ளை இன்று கணிசமாக குறைந்தது.

சென்னையில் இன்று காலை 5 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 23 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 8 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூரில் 33 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் முடக்கப்பட்டுள்ளன.

குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருவதால் வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை தொடங்கி உள்ளது.

சென்னையில் 90 சதவீதம் பேர் கேன் தண்ணீரைதான் நம்பி உள்ளனர். அவர்களுக்கு கேன் தண்ணீர் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலர் கூடுதலாக கேன் தண்ணீரை வாங்கி இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிலர் தண்ணீரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். பொதுவாக கேன் தண்ணீர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுகிறது.

ரூ.25 முதல் ரூ.40 வரை கேன் தண்ணீர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக ஒரு கேன் தண்ணீர் ரூ.50 முதல் ரூ.60 வரை அதிகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

சீல் வைக்கப்பட்டுள்ள கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் உடனடியாக தண்ணீரை உற்பத்தி செய்யும் பணியை தொடங்க இயலாது. எனவே கேன் தண்ணீர் சப்ளை பாதிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள், “நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெறுவதற்கு எளிய வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்கி தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

நிலத்தடியில் இருந்து குடிநீர் எடுப்பதற்கான ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே 2014-ம் ஆண்டுக்கு பிறகு குடிநீர் ஆலை தொடங்குபவர்களுக்கு தான் அந்த சட்டம் பொருந்தும்.

2014-ம் ஆண்டுக்கு முன்பே குடிநீர் ஆலைகளை நடத்துபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. ஆனால் 2014-ம் ஆண்டுக்கு முன்பு குடிநீர் ஆலை தொடங்கியவர்களும் புதிய உரிமம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கான வழிவகைகளை ஆய்வு செய்து காணும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி குடிநீர் எடுப்பதற்கான உரிமம் பெறுவதை எளிமையாக்க கொள்கை ரீதியில் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது ஐகோர்ட்டின் உத்தரவு காரணமாக தமிழ் நாடு முழுவதும் 1,300 குடிநீர் ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது. இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் என்று சுமார் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். தற்போது உள்ள 1,689 குடிநீர் ஆலைகளும் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்று, பி.ஐ.எஸ்.யின் தர கட்டுப்பாடு சான்றிதழ் பெற்று குடிநீர் உற்பத்தி செய்து வருகிறார்கள். இந்த ஆலைகள் தொடர்ந்து செயல்பட அரசு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நிலத்தடி நீர் எடுப்பதற்கு சில வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நிலத்தடி நீர் எடுக்கப்படும் இடங்கள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி, பாதி அபாயகரமான பகுதி, சராசரியான பகுதி என 4 விதமாக நிலத்தடி நீர் எடுப்பதற்கு குறுவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி ஆகிய 2 இடங்களிலும் தண்ணீர் எடுக்க முடியாத பகுதியாகும். அங்கு குடிநீர் உறிஞ்சி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதி அபாயகரமான பகுதி மற்றும் சராசரியான பகுதிகளில் குடிநீர் உற்பத்தி ஆலைகள் அமைக்கலாம். அந்த பகுதிகளில் கேட்கப்படும் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு உரிமம் வழங்குவது இல்லை என்ற தகவலில் உண்மையில்லை.

அனுமதி இல்லாத குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சீல் வைக்கப்படுகிறது.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top