அரசு மருத்துவர்களுக்குப் போராட உரிமையில்லை; பணிமாற்றம் ரத்து:உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவர்களுக்குப் போராட்டம் நடத்த உரிமையில்லை எனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களைப் பணிமாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி முதல் ஐந்து நாட்கள்அரசு மருத்துவர்கள்   தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு ‘சார்ஜ் மெமோ’ எனும் குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்கு பணி மாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (பிப்.28) இறுதித் தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு மருத்துவர்களுக்குப் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு மருத்துவர்களை பணிமாற்றம் செய்தும், ‘சார்ஜ் மெமோ’ வழங்கியும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து அரசு மருத்துவர்களும், அரசும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.

“அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்காமல் நீண்ட கால உறக்கத்தில் இருக்கும் ஒரு அரசுக்கு எப்படி புரிய வைப்பது எங்களது கோரிக்கைகளை.போராடித்தான் புரியவைக்க முடியும்.எங்களது போராட்டம் என்பது அரசு எங்கள் மீது திணித்தது.போராடுவது அடிப்படை உரிமை.அதையும் நீதிமன்றங்கள் பறித்து விட்டால் நாங்கள் யாரிடம் முறையிடுவது”  என்று அரசு மருத்துவர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டார்கள்.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top