டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம்

டெல்லி கலவரம் தொடர்பாக பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, மோடியின் அதிகாரம் நீதித்துறைக்கு எதிராகப் பழிவாங்கும் போரில் ஈடுபடுகிறது எனக் கண்டித்துள்ளது.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 3 நாட்களாக நடந்த கலவரத்தில் 27 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டோர், போலீஸார், பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

இந்தக் கலவரம் தொடங்குவதற்கு முன்பாக, பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ரா, மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோர் மக்களைத் தூண்டிவிடும் வகையில் வெறுப்புணர்வுடன் பேசியதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதையடுத்து டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், ” பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிபதிகளைத் தேர்வு செய்யும், இடமாற்றம் செய்யும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதைக் காங்கிரஸ் கடுமையாகக் கண்டித்துள்ளது. அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில், ” நீதிபதி முரளிதர் இடமாற்றம் என்பது, நாட்டில் நீதித்துறையைக்கூட விட்டுவைக்கமாட்டார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. பாஜகவின் பழிவாங்கும் அரசியல் வெளிவந்துவிட்டது. டெல்லி கலவர வழக்கில் சிக்கியுள்ள பாஜக தலைவர்களைக் காக்கவே நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  ட்விட்டரில் கூறுகையில், ” மத்திய அரசு நீதித்துறையின் மூச்சை நிறுத்த முயல்கிறது. மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை முறிக்க முயல்வது வேதனையாக இருக்கிறது. இப்போதுள்ள ஆட்சியில் நீதிபதி முரளிதர் நள்ளிரவில் இடமாற்றம் செய்யப்பட்டது என்பது எனக்கு வியப்பாக இல்லை. உண்மையில் எனக்கு வருத்தமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், ” துணிச்சலான நீதிபதி லோயாவை நினைவிருக்கிறதா? அவர் இடமாற்றம் செய்யப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார். [ லோயா கொல்லப்பட்ட வழக்கில்தான் அமித்ஷா கைது செய்யப்பட்டார் ]

குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்புடைய போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி லோயா. இவர் கடந்த 2014ம் ஆண்டு, டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் மர்மமான முறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top