“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக கோவில்களில் உள்ள சாமிசிலைகள் அரிதானவை, அவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’ என்று ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின்போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்தும் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆஜராகி வாதிட்டார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் பெயரில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கடந்த சில ஆண்டுகளாக பொன் மாணிக்கவேலின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் ஓய்வுபெற்ற பின்னரும் விசாரணை ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கவில்லை. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஆவணங்களை ஒப்படைக்கவில்லை.

தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக 19 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மேலும் 15 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 31 ஆயிரம் கோவில்களில் உள்ள 3 லட்சத்து 31 ஆயிரம் சிலைகள் படம்பிடிக்கப்பட்டு, டிஜிட்டல் தரத்திற்கு மாற்றப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதள சர்வரில் சேமிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 3,087 கோவில்களில் தலா ரூ.10 லட்சம் செலவில் சிலைகள் பாதுகாப்பு அறைகளை கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.308 கோடியே 70 லட்சம் ஒதுக்கியுள்ளது. சிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ள மையங்களில் கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள சிலைகள் அரிதானவை. பழமையானவை. செய்தித்தாள்களில் கூட சிலைகள் பல நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

எனவே, தமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top