மெளனம் காக்கும் நண்பர்களுக்கு சொல்லவும் ஒரு வார்தையுண்டு…

மெல்ல மெல்ல முகம் மறைக்கிறார்கள். நண்பர்கள் அதிகம் கூடி பேசும் சமயங்களில் தன்னிருப்பை தவிர்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் இருந்து மெல்ல வெளியேறுகிறார்கள். நம்பிக்கையான நட்புகளின் முகம் மாறுவதை அதிர்ச்சியுடன் உற்று நோக்குகிறாரகள். தங்களின் பயத்தை, நியாயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள ஆளின்றி தவிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த நிலம் தன்னை தனிமைபடுத்துகிறதா என்பது புரியாமல் இரவுகளில் தூக்கம் மறுக்கிறார்கள்.

பெருவெள்ளத்தில் பாதித்தவர்கள் தங்கி இளைப்பாற தங்களது மசூதிகளை அவர்கள்தான்  திறந்தார்கள், உணவு சமைத்து அதை நகரெங்கும் கொடுத்து பசியாற்றியிருக்கிறார்கள். பேரிடர்களின் போது ஆதரவின்றி அலைந்த எளிய மக்கள் தோள்சாயவும், இழப்பில் மீண்டெழவும் உறுதுணையாகி கூடவே பயணித்திருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது ஒவ்வொரு நாளும் தங்களது தேச பற்றினை இந்த சமூகத்திற்கு நிறுவ வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.

அலுவகம் நிறைந்திருக்கும் போதும் பேச ஆளில்லாமல் அலைவது எவ்வளவு கடினம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பனிக்கும் கண்களுடன் தெரிந்த முற்போக்கு பேசும் நண்பர்களின் கையை பிடித்துக்கொண்டு ‘ஏதும் நடக்காதுல்ல தோழர்? ‘ என வினவும் நேரங்களில் கலங்கவும் வைக்கிறார்கள்.

பெரும்பான்மை சமூகத்தின் மெளனத்திற்குள் தங்களது எதிர்காலம் புதையுண்டு கிடப்பதை கண்டு அல்லலுறும் அவர்களுக்கு சொல்ல வார்த்தைகள் இருக்கிறது “சேர்ந்தே போராடி இக்காலத்தையும் கடப்போம் நண்பா! பாசிஸ்டுகள் வரலாற்றில் என்றுமே நிலைத்ததில்லை சகோதரா! “. தங்களது மெளனம் தன்னுடன் இவ்வளவு காலமும் பயணித்த நண்பனின் மனதிற்கு வேதனையளிக்கும் என தெரிந்தும் மெளனம் காக்கும் நண்பர்களுக்கு சொல்லவும் ஒரு வார்தையுண்டு அது மார்ட்டின் லூதர் கிங் சொல்லிச் சென்றது. “ஒவ்வொரு முடிவிலும் எங்களை கொடுமையாக வதைத்த எதிரிகளின் வார்த்தைகள் நினைவிலிருப்பதில்லை. மாறாக நண்பர்களின் மெளனம் தான் நினைவிலிருக்கிறது’.

மெளனம் கலைப்போம்.

Arunkumar


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top