அமெரிக்க கோழிக்கறிக்கு இறக்குமதி வரி குறைப்பா? – கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்ப்பு

ட்ரம்ப் இந்தியா வருகை தரும்போது  அமெரிக்க கோழிப்பண்ணை பொருட்களுக்கான இறக்குமதியை குறைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என பிரதமர் மோடிக்கு இந்திய  கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை வி்டுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளனர். அகமதாபாத்தில் உள்ள 1.1 லட்சம் இருக்கைகள் கொண்ட மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் ‘கெம் சோ ட்ரம்ப்’ என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரது வருகைக்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், பிரதமர் மோடியை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்தியாவின் வர்த்தக செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே இந்திய பயணத்தில் வர்த்தக ஒப்பந்தங்கள் பெரிய அளவில் செய்வதற்கு விருப்பமில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை தரவுள்ள நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக அவர் அதிருப்தி தெரிவித்து வருகிறார். மோடி மீதான நேசம் காரணமாகவே இந்தியா வருவதாகவும், வர்த்தக ஒப்பந்தத்தில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை எனவும் அவர் கூறி வருகிறார்.

ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகையின்போது இருதரப்பிலும் வர்த்தகமே முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. அமெரிக்க  பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா கணிசமாக குறைக்க வேண்டும் என்பதே ட்ரம்பின் எதிர்பார்ப்பு, அதற்காகவே அவர் வர்த்தகம் ஒப்பந்தங்கள் தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

அதேசமயம் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்கக் கூடாது என இந்திய உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய கோழிப்பண்ணை உரிமையாளர்கள்  பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ட்ரம்ப் இந்தியா வருகை தரும்போது சில முக்கிய ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க கோழிப்பண்ணை பொருட்களுக்கான இறக்குமதியை குறைக்க வேண்டும் என அமெரிக்க நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி அமெரிக்க பண்ணை பொருட்களை அதிகஅளவில் இந்தியாவில் இறக்குமதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.

இதுமட்டுமின்றி பண்ணை சார்ந்த பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்யவும், அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாக பண்ணைப் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யவும் திட்டமிட்டு வருகின்றன.

இதற்கு ஏற்ப இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்தியாவில் பண்ணை தொழிலை நம்பி 10 கோடிக்கும் அதிகமான கிராமப்புற மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அமெரிக்க கோழிக்கறி உட்பட பண்ணைப்பொருட்கள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டால் அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சியாகி விடும். எனவே இதுபோன்ற ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top