தமிழக கடற்பகுதியில் 50 கி.மீ. வேகத்தில் காற்று: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தமிழகத்தின் கடற்பகுதியில் 45 கிமீ முதல் 50 கிமீ வரை பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் கடலுக்குள் மீன்பிடிக்க வேண்டாம் என்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால்  ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டும் அறிவுறுத்தியுள்ளதுடன் கடலுக்குச் செல்லுவதற்கான அனுமதி டோக்கனையும் வழங்கவில்லை.

இதனால் சனிக்கிழமை ராமேசுவரம், பாம்பன், மண்டபம், பனைக்குளம், தேவிப்பட்டிணம், தொண்டி, எஸ்.பி பட்டிணத்தைச் சார்ந்த 1,200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

முன்னதாக இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சனிக்கிழமை அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top