அமெரிக்கா-தலிபான் இடையே போர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து?; மைக் பாம்பியோ

 

அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் வரும் 29-ம் தேதி கையெழுத்தாக உள்ளது என வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான்கள் அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது. மேலும், பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இதற்கு தலிபான்கள் நடத்திவரும் தாக்குதல்களில் அமெரிக்க படை வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர். 

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. 

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றுவரும் இந்த பேச்சுவார்த்தை பல்வேறு தடைகளை தாண்டி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் வரும் 29-ம் தேதி கையெழுத்தாகலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் 19 ஆண்டுகால போருக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top