வாட்டி வரும் வெயிலுக்கு இதமாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் திடீர் கோடை மழை

கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிற நிலையில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் 90 சதவீத குளங்கள் நிரம்பின. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டனர். தற்போது நெற்கதிர்கள் அறுவடை செய்யும் பருவத்திற்கு வளர்ந்துவிட்டது.


இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். மழையே இல்லாமல் தொடர்ந்து வெயில் சுட்டெரிப்பதால் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களில் தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் கவலையடைந்தனர்.

இதையடுத்து நேற்று மதியம் முதல் நெல்லையில் திடீரென வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியதுடன், திடீர் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் வாகனஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திடீர் மழை காரணமாக பள்ளி-கல்லூரி சென்ற மாணவர்கள் குடை இல்லாததால் ஆங்காங்கே உள்ள நிழற்குடைகளில் ஒதுங்கி நின்றனர்.

இந்நிலையில் நேற்று தொடங்கிய இந்த மழை தொடர்ந்து இரவு பெய்ததால் நெல்லை டவுன் மற்றும் பாளை பகுதிகளில் உள்ள கோவில்களில் சிவராத்திரியை கொண்டாட சென்ற பக்தர்கள் அனைவரும் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும் அவர்கள் சிவராத்திரி தினத்தன்று மழை பெய்ததால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து மழை இன்று அதிகாலையும் பெய்ய ஆரம்பித்தது. நெல்லை, சீதபற்பநல்லூர், ஆலங்குளம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகளும், மாணவ-மாணவிகளும் குடைகளை பிடித்தபடி சென்றனர். நெல்லை டவுன் பகுதியில் பெய்த மழையினால் சாலையில் குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் மண் கரைந்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்துவிடாமல் இருக்க மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்கினர்.

திசையன்விளையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கை பயிரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை பெய்த கோடை மழையால் முருங்கை பூக்கள் உதிர்ந்தது. மேலும் நெல்லை மாவட்டத்தில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக நிற்கும் நிலையில் இந்த திடீர் கோடை மழையால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1 மாத காலமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் திடீர் கோடைமழை பெய்தது. இன்று காலை தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளான பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் பரவலாக மழை பெய்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top