ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும்- வைகோ

தமிழக அரசு தனி சட்டம் இயற்றுவது, தீர்மானம் இயற்றுவதை மத்திய அரசு பொருட்படுத்தாது என்றும் அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும் என்றும் வைகோ கூறியுள்ளார்.

மதுரையில் இன்று வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 2 கோடி பேரிடம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கையெழுத்து பெற்று ஜனாதிபதியிடம் வழங்கி உள்ளது.

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது. இந்தியாவை ஆக்கிரமித்துவிடலாம் என பா.ஜனதா நினைக்கிறது. அது நடக்காது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசு விரும்பாது. எனவே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே தீரும்.

இதற்கு எதிராக தமிழக அரசு தனி சட்டம் இயற்றுவது, தீர்மானம் இயற்றுவதை மத்திய அரசு பொருட்படுத்தாது. தமிழக அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும். எனவே தஞ்சை விவசாயிகள் விழித்துக் கொள்ள வேண்டும். திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் திரண்டு போராட வேண்டும். மத்திய அரசை கண்டிக்காவிட்டால் தஞ்சை டெல்டா பகுதியை பாலைவனமாகி விடும்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் இனியும் காலம் தாழ்த்தாமல் கவர்னர் நல்லமுடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மதுரை மகபூப்பாளையத்தில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வைகோ சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் கட்டுப்பாடு என்ன என்பதை இங்கே வந்துதான் பார்க்க வேண்டும். பெண்கள் அறவழியில் போராட்டம் நடத்துகிறீர்கள். காந்தியின் கனவை நனவாக்கிய மக்கள் தான் நீங்கள். குடியுரிமை சட்டம் என்பது குடியை கெடுக்கும் சட்டம். அதை அடியோடு நாம் புதைத்துவிட வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் நடத்தி வருகிறோம்.

இஸ்லாமிய மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு மோடியும், அமித்ஷாவும் இதனை செய்கிறார்கள். பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான திட்டம் வகுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இஸ்லாமிய சகோதரிகள் தெருக்களுக்கு வரமாட்டார்கள். அவர்கள் 7 நாட்கள் போராடுகிறார்கள் என்றால் மதுரை வரலாற்றிலேயே கிடையாது.

இந்த சட்டத்தின் மூலம் காந்தியை மீண்டும் சுட்டுக்கொன்றுவிட்டார்கள். கண்ணகி போராடிய மதுரை மண்ணில் இருந்து இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்துகிறார்கள். உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top