குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நெல்லையில் சாதி, மதம் கடந்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், வாபஸ் பெறக்கோரியும் நெல்லையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், வாபஸ் பெறக்கோரியும் எதிர்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA எதிர்ப்பு குழு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடையநல்லூர், புளியங்குடி, மேலப்பாளையம், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பாளை ரஹ்மத் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகள் குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வகுப்புகளுக்கு செல்வதை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் கூடினர்.

குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த தடியடியை கண்டித்தும் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பியும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 2000 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முஸ்லிம் மாணவர்கள் மட்டும் அல்லாது அனைத்து மத மாணவ-மாணவிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும் அவர்கள் கோ‌ஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மதியம் வரை நடந்த போராட்டம் அதன்பின் முடிவடைந்தது.

நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக பெண்கள், சிறுவர்-சிறுமிகள் பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது. பேரணிக்கு மாவட்ட தலைவர் சாதிக் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி யூசுப் அலி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் செய்யது அலி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த பேரணியில் ஏராளமான பெண்கள், சிறுவர்- சிறுமியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தியவாறு சென்றனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top