ஏஜிஆர் நிலுவைக் கட்டணம்;முதல்தவணை ரூ.10 ஆயிரம் கோடியை பார்தி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியது

ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தை வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களை உச்ச நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டுள்ளதையடுத்து, பார்தி ஏர்டெல் நிறுவனம் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஏஜிஆர் கட்டணம் தொடர்பாகக் கடந்த அக்டோபரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஏஜிஆர் எனப்படும் சரிகட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீதத் தொகையை ஆண்டு உரிமக் கட்டணமாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டும்.

அதோடு, அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றை பயன்பாட்டுக்கான கட்டணம், ஈவுத்தொகை மற்றும் சொத்து வருமானம் உள்ளிட்டவை சரிகட்டப்பட்ட நிகர வருவாயாகக் கணக்கிடப்பட்டு, அதில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு உரிமக் கட்டணமாக மத்திய அரசுக்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதன்படி பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.

ஆனால், ரூ.1.47 லட்சம் கோடியைச் செலுத்துவதை மறு ஆய்வு செய்யக்கோரி வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைக் கடந்த ஜனவரி 16-ம் தேதி நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

ஆனால், கட்டணத்தை வரும் 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டிய நிலையில் மீண்டும் மறு ஆய்வு செய்யக்கோரி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் கடுமையாகச் சாடியது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பணியாவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் 17-ம் தேதிக்குள் அனைத்து நிலுவைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று இறுதிக் கெடு விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, மத்திய தொலைத்தொடர்புத் துறை சனிக்கிழமை இரவுக்குள் செலுத்தக் கோரி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது.

இதையடுத்து, பார்தி எர்டெல் நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஏறக்குறைய ரூ.45 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை இன்று தொலைத்தொடர்புத் துறையிடம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பார்தி எர்டெல், பார்தி ஹெக்ஸாகாம், டெலிநார் ஆகியவற்றின் சார்பில் இன்று ரூ.10 ஆயிரம் கோடி ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில் ஒருபகுதியைச் செலுத்திவிட்டோம். எங்களின் சுயமதிப்பீட்டுப் பணியை முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், இதை முடித்தவுடன் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக பணத்தைச் செலுத்திவிடுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு இன்னும் ஏஜிஆர் நிலுவைக் கட்டணமாக ரூ.35 ஆயிரத்து 586 கோடி செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top