குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர முடியாது;சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து விவாதம் நடத்தத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என சபாநாயகர் மறுத்துவிட்டார்.

பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேரவையில் அவைத் தலைவர் தனபால் இதனை அறிவித்தார்.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழக சட்டப்பேரவையிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு, எழுத்துப்பூர்வமாக ஸ்டாலினுக்கு பதில் தந்து விட்டதாக தமிழக சட்டப்பேரவையில் அவைத் தலைவர் தனபால் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள  ஒரு வழக்கு விவகாரம் குறித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று விதி உள்ளது என்று அவைத் தலைவர் தனபால் கூறினார்.

அதற்கு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடத்தப்படாமலேயே, அதுபற்றி தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று கூறுவது ஏன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ள என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்து வருகிறது. 13-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதை எதிர்த்து வருகின்றன. கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஏற்கெனவே திமுக சார்பில் சட்டப்பேரவையில் எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது. திமுக இது தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி, 2 கோடி கையெழுத்துகளைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் சிறுபான்மை மக்களால் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த 14-ம் தேதி வண்ணாரப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளு அதையொட்டி போலீஸ் தடியடி நடந்ததாக கூறப்பட்ட நிலையில் போராட்டம் பெரிதாக வெடித்தது.

நேற்று போராட்டக் குழுவினருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது அவரிடம் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. அதுகுறித்து முதல்வருடன் பேசித் தெரிவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இன்று வரை போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுக சார்பில் நேரமில்லா நேரத்துக்குப் பின் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும் முன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து விவாதம் நடத்தத் தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆனால், சபாநாயகர் தனபால் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார். ஏற்கெனவே இதேபோன்று அனுமதி கேட்டு மறுத்த நிலையில் மீண்டும் அனுமதிக்க வாய்ப்பில்லை எனப் பேரவை விதி 173-ன் கீழ் அனுமதி மறுத்து சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட அனுமதியில்லை என்று சபாநாயகர் தனபால் கூறினார். ஆனால், வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்துப் பேசலாம் என ஸ்டாலினுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top