சென்னையில் இஸ்லாமியர் மீது போலீஸ் தடியடி; ராமநாதபுரம்-மதுரையில் முஸ்லிம்கள் கண்டன போராட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீடிரென வடமாநிலங்களில் நடப்பதுபோல் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இதில் பல நபர்களுக்கு தலையில் சரியான காயம் ஏற்பட்டது .இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அமைதியாக நடக்கும் போராட்டத்தை போலீஸ் கொண்டு வன்முறை போராட்டமாக மாற்ற துடிக்கும் தமிழக அரசை கண்டித்து போராட்டங்கள் வலுபெற்றன

மதுரையிலும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். சிம்மக்கல், கோரிப்பாளையம், உத்தங்குடி, வில்லாபுரம், நெல்பேட்டை, வில்லாபுரம், பெருங்குடி, மாப்பாளையம், கே.புதூர், திருமங்கலம் ஆகிய 10 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மதுரையில் இன்று காலை ஏராளமான முஸ்லிம்கள் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் திரண்டனர். அவர்கள் சென்னையில் நடைபெற்ற தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோ‌ஷம் எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் சிலை அருகே நேற்று இரவு 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திடீரென அவர்கள் செக்காலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன், காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சம்மந்தாபுரத்தில் நள்ளிரவு 11 மணி அளவில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதே போல் வத்திராயிருப்பு அருகேயுள்ள கோமாபட்டி, சிவகாசி, பாவாடி தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே இன்று காலை இஸ்லாமிய கூட்டமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமநாதபுரத்தில் புதிய பஸ்நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் ஏராளமானோர் இரவு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நள்ளிரவு வரை மறியல் போராட்டம் தொடர்ந்தது. மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதே போல் கீழக்கரையிலும் இரவு 11 மணிக்கு நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு முக்கு ரோட்டில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி தங்களது கண்டனத்தை கோ‌ஷமிட்டு வெளிப்படுத்தினர்.

தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் நீண்ட நேரத்திற்கு பின் கலைந்து சென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top