உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரசுக்கு புதிய பெயர் வைத்தது

எந்த நாட்டையும் குறிக்காமல் கொரோனா வைரஸ் இனிமேல் [covid-19]கொவிட்-19 என்ற புதிய பெயருடன் அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் கடந்த வருட இறுதியில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. 

இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர். 

இதற்கிடையில், இந்த வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை 1,018 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 43 ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு ‘கொவிட்-19’ என புதிய பெயர் ஒன்றை ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. கொரோனா (Corona) வைரஸ் (virus) நோய் (disease) மற்றும் வைரஸ் பரவிய ஆண்டான 2019 ஆகியவற்றை இணைத்து கொவிட்-19 (Covid-19) என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர் எந்த ஒரு புவியியல் இடத்தையோ, தனி நபரையோ, ஒரு குழுவையோ அல்லது விலங்குகளையோ குறிப்பிடாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே கொரோனா வைரசுக்கு கொவிட்-19 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.   

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top