வருமானத்தை மறைத்த விவகாரம்: ரஜினிகாந்துக்கு குறைந்தபட்ச அபராதமாக ரூ.66 லட்சம்;வருமான வரித்துறை

வருமானத்தை மறைத்த விவகாரத்தில் ரஜினிகாந்திடம் குறைந்தபட்ச அபராதமாக ரூ.66.22 லட்சம் வசூலிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதற்காக 2002-03-ம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04-ம் ஆண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05-ம் ஆண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் (3 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.66 லட்சத்து 22 ஆயிரத்து 436) நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் வருமான வரித்துறையிடம் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவருடைய மேல்முறையீட்டை வருமான வரித்துறை ஏற்கவில்லை. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ரஜினிகாந்த் கோரிக்கையை கடந்த 2013-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. மேலும் அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவையும் ரத்து செய்தது.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தது. வருமான வரித்துறையில் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு குறைவான வரி தொடர்பான வழக்குகளில் மேல்முறையீடு தேவையில்லை என்றும், ஏற்கனவே மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால், அந்த வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை திரும்பப்பெறுவதாக வருமான வரித்துறை, ஐகோர்ட்டில் தெரிவித்தது.

இதையடுத்து ரஜினிகாந்துக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் வருமான வரித்துறை கைவிட்டுள்ளது. ரஜினிகாந்த் தாக்கல் செய்த வருமான கணக்குகளின் அடிப்படையில், கடந்த 2002-03 மற்றும் 2004-05 ஆகிய ஆண்டுகளில் படம் எதுவும் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. அவரிடம் நடந்த விசாரணையில் தனது அலுவலகம் மற்றும் வீட்டு செலவுகளை நஷ்ட கணக்கில் காட்டியதும் தெரியவந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த செலவுகள் விவரம் குறித்து தொடக்கத்தில் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் அவர் காட்டவில்லை என்பதாலும், இதற்கான வருமானத்தை அவர் மறைத்திருக்கலாம் என்பதாலும் ரஜினிகாந்துக்கு முதலில் விதித்த அபராத தொகையை வருமான வரித்துறை வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அபராத தொகை குறைந்தபட்சம் ரூ.66.22 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1.98 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top