குடியுரிமை திருத்தசட்டம்; எதிர்த்து கோவையில் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோவையில் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு சார்பில் பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு சார்பில் நேற்று பேரணி நடந்தது.

இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கை குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு சிறுவன் காவி துண்டு, கழுத்தில் மாலை அணிந்தபடி கலந்துகொண்டான்.

மேலும் 670 அடி நீள தேசிய கொடியை ஏராளமான இளைஞர்கள் பிடித்தபடி கலந்து கொண்டனர். சிலர் முரசுகளை கொட்டி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

பேரணி செஞ்சிலுவை சங்கம் வந்ததும், அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., தி.மு.க.வை சேர்ந்த நா.கார்த்திக் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர துப்பாக்கிகளை ஏந்திய அதிவிரைவு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வ.உ.சி. மைதானத்துக்குள் யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அந்த மைதானத்தை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசும் எந்திரமும் கொண்டு வரப்பட்டு இருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top