அரசியலமைப்பு சட்டத்தை காக்க மனு எதிர்ப்பு ஊர்வலம்: ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் கைது

“இன்குலாப் ஜிந்தாபாத்”, “மனுவாட் ஹோ பார்பாத்” என குடியரசு தினம் முன்னிட்டு அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதாகத் தெரிவித்து அம்பேத்கர் சிலையை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நாடெங்கும் இன்று குடியரசு தினக் கொண்டாட்டம் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் அதன் ஊடாக பல்வேறு கைது சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இன்று காலை ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள மஸ்ஜித் பண்டாவில் உள்ள அம்பேத்கர் சிலையை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

அவர்கள் ஊர்வலத்தின்போது ”அரசியலமைப்பு சட்டத்தை உயர்த்திப்பிடி, மனுவை தோற்கடி” போன்ற முழக்கங்களை எழுப்பினர். அவர்களை நோக்கி போலீஸார் வருவதைக் கண்டபிறகும் அவர்களது முழக்கம் தொடர்ந்தது.

அப்போது இவர்கள் தாங்கள் அரசியலமைப்பைக் காக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த ஊர்வலத்தை நடத்தியதாக தெரிவித்தனர். ”தெலுங்கானா காவல்துறையே திரும்பிச் செல்”, “இன்குலாப் ஜிந்தாபாத்”, “மனுவாட் ஹோ பார்பாத்” மற்றும் “மாணவர்கள் ஒற்றுமை ஓங்குக” என்ற முழக்கங்களை தொடர்ந்து எழுப்பினர்.

இருப்பினும், ஊர்வலத்திற்கு எந்த அனுமதியும் இல்லை என்று கூறி சைபராபாத் காவல்துறை அவர்களை பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் தடுத்து நிறுத்தியது. பின்னர் காவல்துறையினர் மாணவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top