கொரோனா வைரஸ்; சீனாவில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு;தமிழர்கள் ஊர் திரும்ப திண்டாட்டம்!

சீனாவை கொரோனா வைரஸ் தாக்கியதை தொடர்ந்து . பலரின் உயிர்களை பறித்துள்ள அந்த வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்குள்ள தமிழர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். அதன்பின் இந்த வைரஸ் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது.

முதலில் உகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் உகானில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு முதலில் 3 பேரும், பின் 6 பேரும் பலியாகினர்.  பின்பு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உகான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.  ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. வுகான் நகர குடியிருப்புவாசிகள் வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, சீனாவில் நேற்று காலை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 41 ஆக உயர்ந்தது. பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள்.  சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,300 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் 15 பேர் இன்று பலியாகினர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதிய கொரோனா வைரஸ் 2 ஆயிரம் பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் சீனாவில் இருக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் செத்து, பிழைப்பதாக அவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.

சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் ஓட்டல்கள், ஐ.டி.கம்பெனிகளில் சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தமிழர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியால் போதுமான உணவு, தண்ணீர் இன்றி அங்கு தவித்து வரும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து உகான் நகரில் ஓட்டலில் பணியாற்றி வரும் தேவகோட்டையை சேர்ந்த மூர்த்தி என்பவர் கண்ணீர்மல்க கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான உகான் நகரில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். ஓட்டல்கள், ஐ.டி.கம்பெனி, கல்வி நிலையங்கள் என பல்வேறு பணிகளை செய்து வரும் நாங்கள் 70 பேர் கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாமல் அறைகளிலேயே முடங்கி கிடக்கிறோம்.

மீதம் உள்ளவர்கள் நிலைமை என்னவாயிற்று? என்று தெரியவில்லை. ஓட்டல்கள் மூடப்பட்டதால் உணவு கிடைப்பது இல்லை. இதனால் பசியோடும், பட்டினியோடும் நாட்களை கழிக்கிறோம். சொந்த ஊர்களுக்கும் திரும்பமுடியவில்லை என்பது கூடுதல் தலைவலியை ஏற்படுத்துகிறது.

“உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்து, நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள். சொந்த ஊர்களுக்கு வெளியே தனியாக அறை எடுத்து கொடுங்கள். நாங்கள் அங்கே நோய் தொடர்பான பீதி தணியும் வரையிலும் தங்கி இருக்கிறோம் என்று எங்களுடையை நிலைமையை இந்திய தூதரக அதிகாரிகளிடம் கூறினோம். ஆனால் அவர்கள் எந்த பதிலையும் சொல்லவில்லை.

ஒவ்வொரு நாளும் மரண வேதனையை அனுபவித்து வருகிறோம். செத்து, பிழைத்து வருகிறோம். எனவே பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழர்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களை பத்திரமாக மீட்டு, தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top