ரஜினிகாந்த் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு வழக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு

ரஜினிகாந்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால். உரிய காலகட்டத்துக்கு பிறகு வழக்கு தொடருங்கள் என்று மனுதாரர்களிடம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்தார்.

திராவிடர் கழக தலைவர் சமூகநீதி போராளி பெரியார் குறித்து அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அரைகுறையாக படித்து விட்டு கருத்து தெரிவித்திருந்தார்.அது பெரியாரிய தோழர்களை புண்படுத்தியதாலும் எளிய மக்களுக்கு எதிரான பேச்சாக இருந்ததாலும்   அவர் மீது திருவல்லிக்கேணி போலீசில், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் செய்தார்.

இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அதேபோல, திராவிடர் விடுதலைக்கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் நேருதாசும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் திராவிடர் கழகம் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக நான் கொடுத்த புகார் மீது கோவை மாவட்டம் காட்டூர் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்’ என்று கூறியிருந்தார்.

இந்த 2 வழக்குகளும் நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘பெரியார் மிகப்பெரிய தலைவர். அவர் வகுத்த கொள்கைகளின் அடிப்படையில்தான் தமிழகத்தில் ஏராளமான திராவிட கட்சிகள் உருவாகியுள்ளன. அப்படிப்பட்ட தலைவர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இதுபோன்ற கருத்து தெரிவித்து இருக்கக்கூடாது. ஆனால், அவர் பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் கருத்து தெரிவித்ததாக கூறுகிறார்.

அதேநேரம் மனுதாரர்கள் இருவரும் போலீசில் புகார் செய்துள்ளனர். அந்த புகாரை சட்டப்படி போலீசார் பரிசீலிப்பதற்கு முன்பே ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்து விட்டனர். கொடுத்த புகார் மீது இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர் அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுக்கவேண்டும். அதன்பின்னர் 15 நாட்களுக்கு பின்னரே சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகவேண்டும். இந்த நடைமுறையை மனுதாரர்கள் பின்பற்றவில்லை’ என்று வாதிட்டார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.கான்சியஸ் இளங்கோ, லட்சுமிநாராயணன் ஆகியோர் ஆஜராகி, ‘காட்டூர் மற்றும் திருவல்லிக்கேணி போலீசில் கடந்த 17-ந்தேதி மற்றும் 20-ந்தேதி மனுதாரர்கள் புகார் செய்துள்ளனர். அந்த புகார்களை உடனே போலீசார் பரிசீலிக்கவில்லை. எனவே, இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர் போலீஸ் அதிகாரியிடம் மனு கொடுத்து, அவரும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மட்டுமே, வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்யமுடியும் என்று சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதை ஏன் பின்பற்றவில்லை?. எனவே, உரிய காலக்கட்டத்துக்கு பின்னர் வழக்கு தொடருங்கள்’ என்று கூறினார்.

இதையடுத்து மனுதாரர்கள் வக்கீல் மனுக்களை திரும்பப்பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுக்களை திரும்ப அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பின்னர் நீதிபதி, ‘பெரியார் மிகப்பெரிய தலைவர். அவரை எல்லோரும் மதிக்கின்றனர். பெரியாரின் திராவிட கொள்கைகளை கொண்ட கட்சித்தான் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறது. அதனால், இதுபோன்ற பிரச்சினைகளை அரசு பார்த்துக்கொள்ளும். நீங்கள் (மனுதாரர்கள்) ஏன் கவலைப்படுகிறீர்கள்?’ என்றும் கருத்து தெரிவித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top