தி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி பிப்ரவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தவும் தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளே கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., திராவிடர் கழக துணைத்தலைவர் கலி பூங்குன்றன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி துணை பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத்திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எதிர் தரப்பில் பலமான கூட்டணி உருவாக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வது குறித்தும், புதிய கட்சிகளின் தாக்கம், தற்போதையை அரசியல் சூழ்நிலை, மக்களின் எண்ணங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தி, அதனை ஜனாதிபதி மாளிகையில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தீர்மானம் வருமாறு:-

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தும் மனப்பான்மையுடன், குடியுரிமைத்திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை, ஜனநாயகத்திற்கு புறம்பான வகையில், மக்கள் மீது திணித்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி மாணவர்களையும், மக்களையும் போராட்டக் களத்தில் தள்ளி நாடு சந்தித்து வரும் பொருளாதாரச் சீரழிவுகளில் இருந்து தேசிய அளவில் கவனத்தைத் திசை திருப்பவும் தனது பிற்போக்கு அடிப்படைவாத சித்தாந்தத்தை நிறைவேற்றவும் மத்திய பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்த கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஒவ்வொரு குடிமகனும், நான் இந்த நாட்டுக் குடிமகன் என்று, வரிசையில் நின்று, கூறிட வேண்டிய நெருக்கடியை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கியுள்ளது என்றால் இதற்கு முழு முதல் காரணம் மாநிலங்களவையில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க. எம்.பி.க்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து, வாக்களித்ததே. மத்திய பா.ஜ.க. அரசையும், சுயநலத்தோடு அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க அரசையும் அனைத்துக் கட்சிகளின் இந்தக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் என்.பி.ஆர்.-யை அனுமதிக்கமாட்டோம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை கூட்டத்தை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிகளின் இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இத்துடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படுமானால், அதுகுறித்து, எவ்வித தகவல்களையும் அளிக்க வேண்டாமென பொதுமக்களை அனைத்துக் கட்சிகளின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சி.க்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், அனைவரது எதிர்வினைச் சிந்தனைகளையும் ஒருமுகப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்கும் வகையில், பிப்ரவரி 2-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) முதல் பிப்ரவரி 8-ந்தேதி (சனிக்கிழமை) வரை கையெழுத்து இயக்கம் நடத்திடுவது என்றும்; அப்படிப் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து, அளித்து, தமிழக மக்களின் ஏகோபித்த எண்ணத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது என்றும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top