குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு; 99 பேருக்கு வாழ்நாள் தடை!2 தாசில்தார்களிடம் விசாரணை

குரூப்-4 தேர்வை அழியும் மையால் எழுதி முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மாபெரும் மோசடி தொடர்பாக 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2 தாசில்தார்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 பதவிகளில் 9 ஆயிரத்து 398 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி நடத்தியது.

இந்த தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 12-ந் தேதி தரவரிசை பட்டியலுடன் வெளியானது.

இந்த தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் ராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 39 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் பலர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் புகார் கூறினர். அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணையை தொடங்கியது. சம்பந்தப்பட்டவர்களை கடந்த 13-ந் தேதி நேரில் அழைத்து விசாரணை நடத்தியது.

அப்போது குற்றச்சாட்டுக்கு இலக்கான தேர்வர்கள் மாதிரி தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதில் அவர்கள் சரியாக எழுதவில்லை. இது தேர்வாணையத்துக்கு மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இதையடுத்து அவர்களிடம் விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதும், இதற்கு சில அதிகாரிகளும், இடைத்தரகர்களும் உடந்தையாக இருந்ததும் அம்பலமாகி இருக்கிறது.

இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை, ராமேசுவரம் தேர்வு மையங்களை தேர்வு செய்ததாகவும், விடைகளை குறித்ததும் சில மணி நேரத்தில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவை (‘மேஜிக் பேனா’) கொண்டு தேர்வர்கள் விடைகளை குறித்துவிட்டு வந்ததும் தெரிய வருகிறது. இந்த பேனாவை இடைத்தரகர்கள் வழங்கியதும் தெரியவந்து உள்ளது.

பின்னர் இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டு இருந்த நபர்களின் துணையுடன் தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளை குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்து இருக்கின்றனர். அதில் 39 தேர்வர்கள் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்திருந்தனர்.

இந்த தேர்வு குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களை தலஆய்வு செய்தும், தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையிலும் கீழக்கரை, ராமேசுவரம் தேர்வு மையங்களில் தவறுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதுதவிர, வேறு எந்த தேர்வு மையங்களிலும் எந்த விதமான தவறும் நடைபெறவில்லை. பலவழிகளில் அறிவுறுத்தியும் இதுபோன்ற தவறுகளில் சில தேர்வர்கள் ஈடுபட்டிருப்பது தேர்வாணையத்துக்கு வருத்தமளிப்பதாகவும், தேர்வாணையத்தின் மாண்பை குலைப்பதாகவும் உள்ளது.

இந்த காரணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்படுகிறது. தரவரிசை பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதிலாக தகுதியான வேறு 39 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத் தரகர்களாக செயல்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும்.

இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாதபடி தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது. எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கைவைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பு செயலாளர் பாலசுப்பிரமணியன், நேற்று முன்தினம் இரவு போலீஸ் டி.ஜி.பி. திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி அந்த புகார் மனுவை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு விசாரணைக்காக அனுப்பிவைத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதுதொடர்பான விசாரணையை உடனடியாக தொடங்கினார்கள். டி.என்.பி.எஸ்.சி. சார்பு செயலாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில், 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதவிர சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்சேட், ஐ.ஜி. சங்கர் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில், சூப்பிரண்டுகள் ரெங்கராஜன், மல்லிகா, மாடசாமி, விஜயக்குமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சூப்பிரண்டு மல்லிகா தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துகிறார்கள். மற்ற 3 சூப்பிரண்டுகள் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். வழக்குப்பதிவு செய்தவுடன் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

முறைகேடு நடந்த கீழக்கரை தேர்வு மையத்துக்கு கீழக்கரை தாசில்தாரும், ராமேசுவரம் தேர்வு மையத்துக்கு ராமேசுவரம் தாசில்தாரும் தேர்வு அதிகாரிகளாக செயல்பட்டு உள்ளனர். அவர்கள் இருவரையும் நேற்று அதிகாலையிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.

முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை முக்கிய இடைத்தரகர் ஒருவர் ஒருங்கிணைத்து செயல்பட்டு உள்ளார். அவருக்கு துணையாக மேலும் சில இடைத்தரகர்களும் இருந்து உள்ளனர். அவர்களில் 4 இடைத்தரகர்கள் நேற்று சிக்கினார்கள்.

இந்த 4 பேரில், 3 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர். கைதானவர்களில் 2 இடைத்தரகர்கள் அரசு ஊழியர்கள் ஆவார்கள். அவர்களில் ஒருவர் பெயர் ரமேஷ் (வயது 39). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்ககத்தில் (டி.பி.ஐ.) அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

மற்றொருவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்று எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன் (35) ஆவார்.

3-வது நபர் தற்போது முறைகேடு நடந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர் ஆவார். அவருடைய பெயர் நிதீஷ் குமார் (21). இவர்களில் ரமேசும், நிதீஷ்குமாரும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்கள்.

கைதானவர்கள் மீது 14 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

முக்கிய இடைத்தரகர் ஒருவரை கைது செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் கைது செய்யப்பட்டால்தான் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட முறைகேடு எவ்வாறு அரங்கேற்றப்பட்டது? என்பது முழுமையாக தெரியவரும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top