குடியுரிமை திருத்த சட்டம்; அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்;உச்சநீதிமன்றம்அறிவிப்பு

குடியுரிமைச் சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. அதேசமயம் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர போராட்டங்களை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும், பாஜக ஆளாத மாநில அரசுகளும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளன. இதில் கேரள அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த மாதம் 31-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. உச்ச நீதிமன்றத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.

கேரள மாநிலத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் தலைமையில் ஆளும் காங்கிரஸ் அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தது. கேரளா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரத் தயாராகி வருகிறது.

இந்தநிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி 130-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அமைப்புகள் சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், வழக்கு தொடர்ந்த பல்வேறு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் அப்துல் நஸிர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் இந்த சட்டம் தொடர்பாக மனுதாரர்களுக்கு உரிய விளக்கம் எழுத்து மூலம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரா வழக்கறிஞர் கபில் சிபல் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அரசியல் சாசன வரையறைக்குள் உள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியம், அதுவரை இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

குடியுரிமைச்சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top