முஸ்லிம் அகதிகள் குடியுரிமை பெறுவதை தடுக்க குறுக்கு வழியில் அரசாணைகள் இயற்றிய பாஜக அரசு

இந்தியக் குடியுரிமையை பெறுவதிலிருந்து முஸ்லிம் அகதிகளை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறிப்பாக, இந்த அரசாணைகள் யாவும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு முன்பாகவே பிறப்பிக்கப்பட்டவை ஆகும்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் தஞ்சமடைந்த அகதிகளுக்கு (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு) குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு சார்பில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதிலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, முஸ்லிம் அகதிகள் இந்தியக் குடியுரிமையை பெறுவதற்கு தடங்கலை ஏற்படுத்தும் வகையில், 2014-ம் ஆண்டு முதலாகவே மத்திய அரசு சில அரசாணைகளை பிறப்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுதொடர்பாக அந்த அரசாணையை ஆய்வு செய்து, ஓர் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

1950-ம் ஆண்டின் பாஸ்போர்ட் விதிகளையும், 1946-ம் ஆண்டின் வெளிநாட்டினர் சட்டத்தையும் திருத்தி மத்திய அரசு 2018-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி ஓர் அரசாணையை பிறப்பித்துள்ளது. அதில், இந்தியாவில் தங்குவதற்கான நீண்டகால விசாவை (எல்.டி.வி.)பெறுவதிலிருந்து முஸ்லிம்களுக்கும், கடவுள் மறுப்பாளர்களுக்கும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிமுறைகளின் படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் மட்டுமே நீண்டகால விசா வுக்கு (எல்.டி.வி.) விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

எனவே, இந்த விசாவை பெறுவதிலிருந்து முஸ்லிம் அகதிகள் மறைமுகமாக தடுக்கப்படுகின்றனர். 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின்படி, வெளிநாட்டு அகதி ஒருவர் இந்தியக் குடியுரிமையை பெறுவதற்கு நீண்டகால விசாவையோ அல்லது குடியிருப்பு அனுமதியையோ காண்பிக்க வேண்டியது அவசியம்.

மேற்குறிப்பிட்ட அரசாணையின் படி, முஸ்லிம் அகதிகள் நீண்டகால விசா பெற முடியாது என்பதால், அவர்கள் இயற்கையாகவே இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாக ஆகி விடுகின்றனர்.

இவ்வாறு ஆரம்பத்திலேயே, முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக சில அரசாணைகளை பிறப்பித்துவிட்டு பின்னர்தான், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஓர் அரசாணை மட்டுமின்றி இன்னும் சில அரசாணைகளும் முஸ்லிம் அகதிகளுக்கு பாரபட்சம் காட்டும் வகையில் உள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களுடன் இந்த அரசாணைகளுக்கு எதிரான மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top