மத்திய நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் துணைக்குழு முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் துணைக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இவர்கள் பிரதான அணை, பேபி அணை, ‌ஷட்டர் பகுதி, நீர் கசியும் சுரங்க பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணை கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. 152 அடி உயரம் கொண்ட பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அணையின் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க 3 பேர் கொண்ட குழு கடந்த 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

அவர்களுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த துணைக்குழுவினர் அணையில் ஆய்வு செய்து மூவர் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம்.

இன்று மத்திய நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம் இர்வின், துணை பொறியாளர் குமார், கேரள மாநில நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் ஜோசப் கரியா, உதவி பொறியாளர் பிரசித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பிரதான அணை, பேபி அணை, ‌ஷட்டர் பகுதி, நீர் கசியும் சுரங்க பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். மேலும் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிக்கையை மூவர் குழுவிற்கு அளிக்க உள்ளதாக துணைக்குழுவினர் தெரிவித்தனர்.

அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. 262 கன அடி நீர் வருகிறது. 467 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 55.05 அடியாக உள்ளது. 247 கன அடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1390 கன அடி திறக்கப்படுகிறது.

மஞ்ளாறு அணையின் நீர்மட்டம் 48.80 அடியாக உள்ளது. 60 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.49 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிற நிலையில் 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top